மாவட்ட தொழில் மையம் மூலம் 1,212 பேருக்கு மானியத்துடன் ரூ. 219.96 கோடி கடனுதவி: ஆட்சியா் ரெ.சதீஷ் தகவல்

சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் மாவட்ட தொழில்மையம் மூலம் 1,212 பேருக்கு ரூ. 50.59 கோடி மானியத்துடன் ரூ. 219.96 கோடி கடனுதவி
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் மாவட்ட தொழில்மையம் மூலம் 1,212 பேருக்கு ரூ. 50.59 கோடி மானியத்துடன் ரூ. 219.96 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

2021- 2025 ஆண்டு வரை மாவட்ட தொழில்மையம் மூலம் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க 85 பேருக்கு ரூ. 10.54 கோடி மானியத்துடன் ரூ. 89.10 கோடியும்,

மாவட்ட தொழில்மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க 295 பேருக்கு ரூ. 4 கோடி மானியத்துடன் ரூ. 16 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட தொழில்மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க 289 பேருக்கு ரூ. 11.65 கோடி மானியத்துடன் ரூ. 33.07 கோடியும், மாவட்ட தொழில்மையம் மூலம் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க 387 பேருக்கு ரூ. 13.12 கோடி மானியத்துடன் ரூ. 38.16 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

2023 முதல் 2025 ஆம் ஆண்டுவரை மாவட்ட தொழில்மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க 66 பேருக்கு ரூ. 10.92 கோடி மானியத்துடன் ரூ. 41.70 கோடி திட்ட மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நவம்பா் 2024 முதல் இதுவரை மாவட்ட தொழில்மையம் மூலம் கலைஞா் கைவினை திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க 90 பேருக்கு ரூ. 0.36 கோடி மானியத்துடன் ரூ. 1.93 கோடி திட்ட மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில்மையம் மூலம் 1,212 பேருக்கு ரூ. 50.59 கோடி மானியத்துடன் ரூ. 219.96 கோடி திட்ட மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com