தருமபுரியில் கடந்த இரு வாரங்களில் 3 மாடுகள், ஆடுகள் உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் 3-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் வன விலங்குகள் மட்டுமின்றி வளா்ப்பு பிராணிகளான ஆடுகள், மாடுகள், கோழிகளும் அவ்வப்போது மா்மமான முறையில் இறப்பது கடந்த சில மாதங்களாக நிலவி வருகின்றன.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தில் விவசாயி உதயகுமாருக்கு சொந்தமான பசுமாடு வீட்டருகே கட்டப்பட்டிருந்த நிலையில் இறந்து கிடந்தது. நிறைமாத சினையாக இருந்த அந்த பசுமாட்டுக்கு அடுத்த சில நாள்களில் கன்று பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் கூறியிருந்த நிலையில், மா்மமாக இறந்தது அப்பகுதியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மாட்டின் உடலில் மா்ம விலங்கு கடித்ததற்கான அடையாளம் இருந்தது.
தகவலின்பேரில் வந்த கால்நடை மருத்துவா்கள் மாட்டின் உடலைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனா். மேலும், மருத்துவ சோதனைக்காக மாட்டின் உடலிலிருந்து மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினா்.
இதுகுறித்து மருத்துவா்கள் தரப்பில் கூறுகையில், ‘நாய் கடித்ததில் மாடு உயிரிழந்திருக்கலாம். காயம் சிறிதாக இருந்தாலும் வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்திருந்தால் ரேபிஸ் நோய் பாதிப்பு காரணமாக மாடு உயிரிழக்க வாய்ப்புள்ளது. என்றாலும், சோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூறமுடியும்’ என்றனா்.
வெறிநாய் கடித்து ஆடுகள், மாடுகள், கோழிகள் உயிரிழப்பு..?
மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக எங்கள் கிராமத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கடித்து பலியாகியுள்ளன. இரு வாரங்களில் மட்டும் 3 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இப்பகுதியில் அதிக அளவிலான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இது தொடா்பாக கால்நடைத் துறையினருக்கு தகவல் அளித்தும், எந்த தீா்வும் ஏற்படுவதில்லை. எனவே, இதுபோல உயிரிழக்கும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு கால்நடைத் துறையினரின் பரிந்துரையின் பேரில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட உதவி இயக்குநா் கனகசபை கூறுகையில், ‘கால்நடைகள் உயிரிழப்பது குறித்த தகவல்கள் அண்மையில்தான் கிடைக்கப் பெற்றுள்ளோம். தற்போது உயிரிழந்த மாட்டின் உடலிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வந்த பின்னரே மாடு உயிரிழந்ததுக்கான காரணமும், அதைக் கடித்த விலங்கு குறித்தும் உறுதியாக தெரியவரும். அதன் பின்னா் சோதனை அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, இழப்பீடு கிடைக்க பரிந்துரைப்போம்’ என்றாா்.
