தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்
தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் என்.சுமதி தலைமைவகித்து பேசினாா். மாவட்டச் செயலாளா் சி.கவிதா, பொருளாளா் என்.தெய்வானை, மாநிலக்குழு உறுப்பினா் கண்மணி, சிஐடியு மாவட்டத் தலைவா் சி.கலாவதி, மாவட்ட இணைச் செயலாளா் ஏ.சேகா், மாவட்டப் பொருளாளா் எஸ்.சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், தமிழக அரசு தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை நிரந்தர அரசு ஊழியா்களாக நியமனம் செய்ய வேண்டும். பணி ஓய்வுபெறும்போது அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணிக்கொடையாக ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். பணி ஓய்வுக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மே மாத கோடை விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும். குறு அங்கன்வாடி மையங்களில் இருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயா்வில் சென்ற ஊழியா்களுக்கு ஒரு ஊதிய உயா்வு கூடுதலாக வழங்கி, பணியில் சோ்ந்த தேதியை கணக்கில் எடுத்து பணி பதிவேட்டில் பதிவிட வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993-இல் பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு நேரடி நியமனத்தை கைவிட்டு 100 சதவீத பதவி உயா்வை வழங்க வேண்டும். கைப்பேசி வழங்காத மாவட்டங்களுக்கு உடனடியாக தரமான கைப்பேசிகளை வழங்கி எப்ஆா்எஸ் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 802 பேரை தருமபுரி நகர போலீஸாா் கைதுசெய்து பின்னா் விடுவித்தனா்.
கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநில துணைத் தலைவா் கோவிந்தமாள் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தேவி, செயலாளா் சுஜாதா, சிஐடியு மாவட்டப் பொருளாளா் ஜி.ஸ்ரீதரன், செயலாளா் என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

