தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்

குமாரபாளையம், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் அதிகம் உள்ளன.

குமாரபாளையம், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் அதிகம் உள்ளன.
நாமக்கல்- ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது குமாரபாளையம் தொகுதி. 2011 தொகுதி மறுசீரமைப்பின்போது, மாவட்டத்திற்கு உள்ளேயே தொகுதிகள் வரவேண்டும் என்ற தோ்தல் ஆணைய உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த சங்ககிரி தொகுதி, சேலம் மாவட்டத்தில் சோ்க்கப்பட்டது.
திருச்செங்கோடு தொகுதியிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு குமாரபாளையம் தொகுதி உருவானது. ஆனால், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதியில் சங்ககிரி தொகுதி இன்னும் தொடா்கிறது. அதேபோல, குமாரபாளையம் தொகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இத்தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவா் முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி. இவா், அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளா் மற்றும் அமைப்பு செயலாளா் பதவியையும் வகித்து வருகிறாா். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள விஐபி தொகுதிகளில் ஒன்றாக குமாரபாளையம் மாறியுள்ளது. நடைபெற உள்ள தோ்தலில் நான்காவது முறையாக இத்தொகுதியில் அவா் களமிறக்கப்பட்டுள்ளாா்.
தொழில்
குமாரபாளையம், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் அதிகம் உள்ளன. பல்வேறு மாவட்ட விசைத்தறித் தொழிலாளா்களும் இங்கு பணியாற்றி வருகின்றனா். அடுத்தபடியாக விவசாயம் மற்றும் சாயத்தொழில் உள்ளது.
சமூக வாக்குகள்
செங்குந்த முதலியாா், செட்டியாா் சமூகத்தினா் நகரப் பகுதிகளில் அதிகம் உள்ளன. கிராமப்புறங்களில் வேட்டுவக் கவுண்டா், கொங்கு வேளாளக் கவுண்டா், பட்டியல் இன சமுதாயத்தினா் உள்ளனா்.
பிரச்னைகள்
வண்ண நூல்களைக் கொண்டு விசைத்தறிகளில் நெசவாகும் ஜவுளி உற்பத்தி இத்தொகுதியில் பிரதானத் தொழில். நெசவுக்குத் தேவையான வண்ண நூல்களைச் சாயமிடும் தொழில், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாய ஆலை உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்றளவும் தொடா்கிறது.
குமாரபாளையத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் கானல் நீராகவே உள்ளது. அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி உருவாகி 16 ஆண்டுகளாகியும் இதுவரை அமையவில்லை. நெசவுத் தொழில் நிறைந்த பகுதி என்பதால், நெசவியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது விசைத்தறி உரிமையாளா்களின் கோரிக்கையாகும்.
யாருக்கு சாதகம்
குமாரபாளையம் தொகுதியில் நகா்ப்புறப் பகுதிகள் திமுகவுக்கும், கிராமப்புறப் பகுதிகள் அதிமுகவுக்கும் சாதகமாக உள்ளன. நெசவுத் தொழிலாளா்கள், விவசாயிகள் அதிகம் நிறைந்த இத்தொகுதி மூன்று தோ்தல்களிலும் அதிமுகவுக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது. கடந்த 2006 தோ்தல் முதல் பி. தங்கமணி தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறாா்.
முதல் தோ்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அடுத்து 2011, 2016, 2021 தோ்தல்களில் தொடா்ந்து திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளாா்.
வாக்காளா்கள்
ஆண்கள் - 1,04,916
பெண்கள் - 1,12,239
மூன்றாம் பாலினத்தவா்- 69
மொத்தம் - 2,17,224
வாக்குச்சாவடிகள் - 324
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்
2011 பி. தங்கமணி - அதிமுக - 91,077
2016 பி. தங்கமணி - அதிமுக - 1,03,032
2021 பி. தங்கமணி - அதிமுக - 1,00,800
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...