குமாரபாளையம், டிச. 4: அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாததால் குமாரபாளையம் வாரச் சந்தையில் சேற்றுக்கு நடுவே வியாபாரம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
குமாரபாளையம்- எடப்பாடி சாலையில் உள்ள சின்னப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் இச்சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. மொத்த வியாபாரமே அதிக அளவில் நடப்பதால் அருகேயுள்ள மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும்.
எனவே, இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பவானி, தேவூர், புள்ளாக்கவுண்டன்பட்டி, குப்பாண்டபாளையம், கல்லாங்காட்டுவலசு, தட்டாங்குட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் இங்கு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
புகழ்பெற்ற இச்சந்தை முதலில் மிகவும் விசாலமான பரப்பில் இயங்கி வந்தது. ஆனால் நகர்ப்பகுதி விரிவடைந்ததாலும், வளர்ச்சிப் பணிகளுக்கான பல்வேறு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டதாலும் காலப்போக்கில் சந்தையின் பரப்பு மிகவும் சுருங்கி இப்போது வெறும் 1 ஏக்கர் பரப்பில் இயங்கி வருகிறது.
இதனால் முன்பு போல் சந்தைக்கு அதிக அளவில் வியாபாரிகள் வருவதில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதால் சந்தை களையிழந்து விட்டது என்கின்றனர் சுற்றுப்பகுதி மக்கள்.
இப்போது சந்தையில் சுகாதாரச் சீர்கேடு முக்கியப் பிரச்னையாக உள்ளது. பிரதான நுழைவாயிலே மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. வியாபாரிகள் கடை விரிக்கும் பகுதியிலும் நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
சந்தை கூடாத நாள்களில் சுற்றுப்புற மக்கள் இப்பகுதியை திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் வியாபாரிகளும், சந்தைக்கு வரும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியது: லேசாக மழை பெய்தாலே சந்தையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சந்தைக்கு வரவே தயங்குகின்றனர். சந்தைக்குள் பல இடங்களில் குப்பைமேட்டின் மீது மண் போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு தொடர்கதையாக உள்ளது.
இங்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட அரிசிக் கடைகள், 20-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் இயங்கி வந்தன. இதனால் சந்தை கூடும் நாள்களில் களைகட்டி இருக்கும். ஆனால் இப்போது அரிசிக் கடைகளே கிடையாது. ஓரிரு மளிகைக் கடைகள் மட்டுமே உள்ளன என்றனர்.காய்கறிகள், உணவுப் பொருள்கள் அனைத்தும் அசுத்தமான சூழலில் விற்பனை செய்யப்படுவதால், முகஞ்சுளிக்கும் பொதுமக்கள் சந்தைக்கு வருவதையே பெரும்பாலும் குறைத்துவிட்டனர்.
சிறிய ஊர்களில் இயங்கும் சந்தைகளில் கூட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும்போதிலும், இதுவரை கடைகளுக்கு மேற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என்கிறார் ஒப்பந்ததாரர் தங்கவேல்.
மேலும், மின்வசதி, வியாபாரிகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.