சூழல் பாதுகாக்க சுழல்கிறது சைக்கிள்
அரூர், ஜன. 20: நிலம், நீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் மாசுப்படுவதைத் தடுக்கும் நோக்கில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விவசாயி அன்பு சார்லஸ் (53). நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி கிர


அரூர், ஜன. 20: நிலம், நீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் மாசுப்படுவதைத் தடுக்கும் நோக்கில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விவசாயி அன்பு சார்லஸ் (53).
நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு சார்லஸ். விவசாயியான இவர், முதுகலை சமூகவியல் படித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுப்படுவதைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 2005 ஏப்ரல் 22 முதல் சைக்கிளில் சென்று, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், உ.பி, பிகார், மேற்கு வங்கம் உள்பட 20 மாநிலங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தின் போது சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அவர் மக்களிடம் வழங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், உருது, இந்தி உள்ளிட்ட மொழிகள் தெரிந்ததால், அவர் செல்லும் இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது அவருக்கு எளிதாக அமைகிறது.
திருமணமாகாத இவர், அலைபேசியைக்கூட பயன்படுத்துவதில்லை. பழைய சைக்கிளில் பயணம் செய்கிறார். பிரசார வழியில் மக்கள் அளிக்கும் ஊக்கத் தொகை மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
சேலம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அரூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் நோக்கிச் சென்றார்.
அரூர் வழியாக பிரசாரம் மேற்கொள்வதையறிந்த பேரூராட்சித் தலைவர் பி. காவேரி, அன்பு சார்லûஸ வரவேற்று ஊக்கத்தொகை மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கினார். இதில், துப்புரவு ஆய்வாளர் சு. ரவீந்திரன், விஏஓ கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்தியாளரிடம் அன்பு சார்லஸ் கூறியது:
இதுவரை 48 ஆயிரம் கி.மீ. தூரம் சைக்கிளில் பிரசாரம் செய்துள்ளேன். விவசாயப் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ரசாயன பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண், காற்று, நீர் மாசு அடைகிறது.
விவசாயிகளுக்கு நன்மை செய்யும் மின்மினிப் பூச்சிகள், பொன் வண்டுகள், சிட்டுக்குருவி உள்ளிட்ட அரிய வகை பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதிலும், உணவு உட்கொள்வதிலும் சங்கிலித் தொடரான இணைப்புகள் உள்ளன. இதில் சில உயிரினங்கள் அழிந்தாலும் இயற்கையில் மாற்றம் ஏற்படும்.
பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் வெளியாகும் டையாசின், ப்யூரான் உள்ளிட்ட வாயுக்களால் நமக்கு புற்றுநோய் ஏற்படும். உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். மரங்கள் இயற்கையின் கொடை. அதை வெட்டி அழிப்பதன் மூலம் வருங்கால சந்ததிக்கு நாம் அநீதி செய்து வருகிறோம் என்பதை பிரசாரத்தின்போது, மக்களிடம் விளக்குகின்றேன்.
நேபாள நாட்டு எல்லைப் பகுதியில் சென்றபோது நக்சலைட்டுகள் என்னை பிடித்துச் சென்றனர். உளவுப் பிரிவு போலீஸôர் என்று எண்ணிய அவர்கள், என்னை 10 நாள்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். டி.வி. சேனல் ஒன்றில் என்னுடைய பிரசாரம் ஒளிபரப்பானது. இதையடுத்து நக்சலைட்டுகள் என்னை விடுவித்தனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...