யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு வேறு வனப் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் திட்டம்

சேலம், ஜூன் 28: சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக சுற்றித் திரியும் யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு வேறு அடர்ந்த வனப் பகுதிக்கு மாற்ற வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனைக்
Updated on
2 min read

சேலம், ஜூன் 28: சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக சுற்றித் திரியும் யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு வேறு அடர்ந்த வனப் பகுதிக்கு மாற்ற வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி விழுப்புரம் வனப் பகுதியில் இருந்து சேலம் கருமந்துறை வனப் பகுதிக்கு வந்த யானை கூட்டம் இரண்டு மாதங்களாக சேலம், தருமபுரி வனப் பகுதிகளில் சுற்றி வருகிறது. அவ்வப்போது வனப் பகுதியை ஒட்டியுள்ள மனிதர்களின் வாழ்விடங்களுக்கு நுழைவதாலும், பயிர்கள் சேதம் அடைவதாலும் இந்த யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

ஆந்திர வனப் பகுதியில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கும் பிறகு அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் வழியாக சேலம், தருமபுரி மாவட்டங்கள் என 5 மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக இந்த யானைகள் கூட்டம் நடமாடி வருகிறது. ஆந்திரத்தில் இருந்து வரும்போது 10-க்கும் அதிகமான யானைகள் கொண்ட இந்த கூட்டத்தில் இப்போது வெறும் 6 யானைகளே உள்ளன.

வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயத் தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலிகளாலும், நாட்டு வெடிகளை வெடித்து அவற்றை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக விரட்டியதாலும் ஒவ்வொரு யானைகளாக மடிந்து வருகின்றன. அண்மையில் கருமந்துறை வனப் பகுதியில் பிறந்த யானைக் குட்டி பரிதாபமாக இறந்தது. மேலும் கூட்டத்தில் இருந்த மற்றொரு யானையும் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள யானைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை அடுத்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வன உயிரின காப்பாளருமான ராகேஷ் வசிஷ்ட் வியாழக்கிழமை சேலம் வந்தார். சேலம் மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அதிகாரி சுகிர்தராஜ் கோயில் பிள்ளை உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இடம் பெயர்ந்து வந்த யானைகள் நடமாடிய பகுதிகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய முடிவு செய்த அவர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு, மஞ்சவாடி வனப் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் யானைகள் இப்போது நடமாடி வரும் தருமபுரி மாவட்டம் பள்ளிப்பட்டி (விரிவாக்கம்) காப்புக்காடு பகுதிக்கும் அவர் சென்றார்.

முன்னதாக சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் நடமாடி வரும் யானைகளை பாதுகாப்பாக எப்படி பிடிப்பது? அவற்றை எந்த வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று விடுவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்திய வன உயிரின சட்டத்தின்படி யானைகளை பிடித்து அகற்றுவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. இதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதி கிடைத்ததும் யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு லாரிகளில் எடுத்துச் செல்வதா அல்லது வெளிநாடுகளில் செய்யப்படுவதைப் போன்று ஹெலிகாப்டர் விமானம் மூலம் தூக்கிச் செல்வதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாவட்டம், மாவட்டமாக நடமாடி வந்த யானைகள் விரைவில் பிடித்து பாதுகாப்பான வனப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவது உறுதியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com