தருமபுரி, கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தருமபுரியில் நடைபெற்ற 72-ஆவது சுதந்திர தின விழாவில் 125 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி வழங்கினார். 
Published on
Updated on
2 min read

தருமபுரியில் நடைபெற்ற 72-ஆவது சுதந்திர தின விழாவில் 125 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி வழங்கினார். 
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற 72-ஆவது சுதந்திர தின விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவர், தியாகிகளை கௌரவித்தார். 
இதைத் தொடர்ந்து, முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை, இயற்கை மரண நிதி உதவி, தற்காலிக இயலாமை நிதியுதவி, குடும்ப நல உதவித் தொகை என பல்வேறு திட்டங்களின் கீழ் 58 பயனாளிகளுக்கு ரூ. 13.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய்த் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான வீட்டு மனை பட்டாக்கள், முன்னாள் படைவீரர்கள் நலத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சலவைப் பெட்டிகள், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பிலான கல்வி கட்டணங்கள், தோட்டக் கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 87,500 மதிப்பிலான காய்கறி நாற்றுகள், வேளாண்மைத் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான கருவிகள், 14 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71.20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் என பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 125 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந. மோகன் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், சிப்காட் வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, சார் ஆட்சியர் ம.ப. சிவன் அருள், தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்தானம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 72-ஆவது சுதந்திர தின விழாவில் ரூ. 46.95 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் புதன்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72-ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
பின்னர், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊர்காவல் படையினர், நாட்டு நல பணித் திட்ட மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, சுதந்திரத்துக்குப் போராடிய தியாகிகளை கௌரவித்த அவர், நினைவு பரிசுகளை வழங்கினார். முன்னாள் படைவீரர்கள் நலத் துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, வங்கிக் கடன் என ரூ. 40 ஆயிரம், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 72 ஆயிரம் மதிப்பிலான ஓய்வூதியத்துக்கான ஆணை, நலிந்த 13 கலைஞர்களுக்கு ரூ. 1.56 லட்சம் மதிப்பிலான நிதியுதவி, இயற்கை மரண உதவியாக 4 பயனாளிகளுக்கு ரூ. 90 ஆயிரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், வேளாண்மைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 32 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்களும், தோட்டக் கலைத் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனக் கருவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ. 2.48 லட்சம் என மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ. 46.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 98 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். பல்வேறு தனியார், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. மகேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சாந்தி, ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் நரசிம்மன், வன அலுவலர் தீபக் பில்ஜி, பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.