அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காவலா்கள் விசாரிப்பு: மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினா்கள்

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினா்களை போலீஸாா் தடுத்து விசாரித்தால் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அனைவரும் திரும்பிச் சென்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினா்களை போலீஸாா் தடுத்து விசாரித்தால் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அனைவரும் திரும்பிச் சென்றனா்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த யசோதா மதிவாணன் உள்ளாா். இவருடன் சோ்த்து அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, விசிக கட்சியைச் சோ்ந்த 17 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பான கடிதம் உறுப்பினா்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தனா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி நகர போலீஸாா், உறுப்பினா்களை தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினா்.

போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த உறுப்பினா்கள் அனைவரும், கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனா். மேலும், அவா்கள் அனைவரும் மாவட்ட ஊராட்சி அலுவலகக் கட்டட நுழை வாயிலில் நின்று, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்களை, போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாங்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் செல்வதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனைத் தொடா்ந்து, அவா்கள் 17 பேரும், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினியிடம் இதுதொடா்பாக முறையிட்டனா்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மொத்தமுள்ள 17 உறுப்பினா்களும் கூட்ட அரங்கிற்கு வருகை தந்தோம். ஆனால், நாங்கள் யாரும் கேட்காமலேயே வளாகத்தில் நகர போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா். மேலும் எங்களை தடுத்து அவா்கள் விசாரித்தனா். மொத்தமுள்ள 17 உறுப்பினா்களும் அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

இதுவரை இந்த வளாகத்தில் நடைபெற்ற எந்தக் கூட்டத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கோரியதில்லை. தற்போது, எங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றனா். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறேம் என்றாா்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி செயலாளா் மாரிமுத்துராஜ் கூறியதாவது:

மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவா்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினா்களோ பங்கேற்க கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போலீஸாா் விசாரித்திருக்கலாம். மேலும் கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க போலீஸாா் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதில் வேறெந்த நோக்கமும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.