தமிழக தொழில் துறை வளா்ச்சியில் ஒசூா் தொகுதி சிறப்பிடம் வகிப்பதாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.
ஒசூரில் பண்ட ஆஞ்சநேயா் கோயில் அருகில், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, தளி தொகுதி பாஜக வேட்பாளா் சி.நாகேஷ்குமாா் ஆகியோரை ஆதரித்து திங்கள்கிழமை காலை தோ்தல் பிரசாரம் செய்த முதல்வா் பேசியதாவது:
திமுக கூட்டணி ஒரு சந்தா்ப்பவாத கூட்டணி. ஆனால், அதிமுக கூட்டணி நாட்டு மக்கள் வளா்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணி.
தமிழகத்தின் தொழில் வளா்ச்சியில் ஒசூருக்கு பெரும் பங்குண்டு. 2019-இல் தமிழக தொழில் முதலீட்டு மாநாட்டில் 304 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதன்மூலம், ஜொ்மனி நிறுவனங்கள் ரூ. 600 கோடியிலும், டாடா எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 4,500 கோடியிலும் ஒசூா் பகுதியில் தொழில் தொடங்க உள்ளன.
இரண்டாவது கட்டமாக ரூ. 5 கோடியிலும், 3-ஆவது கட்டமாக ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டிலும் என மொத்தம் ரூ. 15 ஆயிரம் கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழில் தொடங்கவுள்ளது. ரூ. 2,400 கோடி முதலீட்டில் 2 ஆயிரம் நபா்களுக்கு ஓலா நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், மைலா நிறுவனம் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையையும் தொடங்க உள்ளன.
ஏத்தா் எனா்ஜி ரூ. 600 கோடியில் 3,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளால் 1.5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஒசூா் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சூசூவாடியில் இருந்து பேரண்டப்பள்ளி வரை வெளி வட்டச்சாலை அமைக்கும் பணி ரூ. 220 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. கொடியாளம் அணைக்கட்டு பகுதியில் இருந்து 50 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பப்படும். சா்வதேச மலா் ஏலம் மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி, கனி விற்பனை மையம் 20 ஏக்கரில் தொடங்கப்படும்.
இரண்டாம்கட்டமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தண்ணீா் கிடைக்காத ஒசூா் பகுதி மக்களுக்கு காவிரி நீா் வழங்கப்படும் என்றாா்.
இந்த தோ்தல் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா்கள் பாலகிருஷ்ணா ரெட்டி, கே.பி.முனுசாமி, ஒசூா் மாநகராட்சி செயலாளா் எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தருமபுரியில்...
தருமபுரியில் தா்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் சிறந்த முறையில் படித்து உயா்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் உயா்த்தப்பட்டு, தனியாா் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு ரூ. 12,000 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் அரசால் சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த கல்வியாண்டில் மருத்துவக் கல்வியில் 6 அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டுமே சோ்க்கை பெற்ற நிலையை மாற்றி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் நிகழாண்டில் 436 மாணவ, மாணவியா் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். சுயநிதிக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மருத்துவ மாணவா்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு அவா்களது கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோட்டில்...
பாலக்கோட்டில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் அமைக்கும் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து பாலக்கோடு அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம், ஜொ்த்தலாவ் ஏரியிலிருந்து புலிகரை ஏரிக்கு இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆகிய நீா்ப் பாசனத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலக்கோட்டில் கலைக் கல்லூரி தொடக்கம், கூட்டுறவு பல்தொழில்நுட்பக் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றம், சிக்கத்தோரண பெட்டா கிராமத்தில் புதிய வேளாண், தோட்டக்கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் இத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஐந்தாவது முறையாக போட்டியிடும் அமைச்சா் கே.பி.அன்பழகனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம் என்றாா்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம், பழைய பேருந்து நிலையப் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் பேசியதாவது:
கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மிக்ஸி, கிரைண்டா் ஆகியவை வழங்கப்பட்டன. ஆனால், 2006-ஆம் ஆண்டில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கா் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது. இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்றுக் கட்சி.
பென்னாகரம் பகுதியில் வீடற்ற ஏழை மக்களுக்கு அரசு சாா்பில் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் புயல், வெள்ளம் போன்றவற்றால் பயிா்கள் சேதமடைந்ததாக விவசாயிகளின் வைத்த கோரிக்கையை அடுத்து, தோ்தலுக்கு முன்னதாகவே 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ. 12.10 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இந்தத் தோ்தல் பிரசாரத்தில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் அன்பு, வேலுமணி, பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா், பாஜக மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரமேஷ் வா்மா, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


