ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானையை துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையைக் கண்டதும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் செயல்களால் யானை மிரண்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.
ஒகேனக்கல் வனப்பகுதியில் நின்றிருந்த யானையின் அருகில் சென்ற சுற்றுலாப் பயணியை துரத்தும் ஒற்றை யானை.
ஒகேனக்கல் வனப்பகுதியில் நின்றிருந்த யானையின் அருகில் சென்ற சுற்றுலாப் பயணியை துரத்தும் ஒற்றை யானை.

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையைக் கண்டதும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் செயல்களால் யானை மிரண்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் வறட்சி நிலவும் போது கர்நாடக மாநிலங்களில் இருந்து யானை கூட்டங்கள் இடம்பெயர்வது வழக்கம். நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வந்ததால் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைக் கூட்டங்கள் பெரிதளவிலும் வனப்பகுதியை விட்டு வெளியேறவில்லை. இருந்தபோதிலும் கூட்டத்தை விட்டு பிரிந்த ஒரு சில யானைகள் அவ்வப்போது மழையற்ற காலங்களில் தண்ணீர் தேடி பென்னாகரம் ஒகேனக்கல் சாலையை கடந்து வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தடுப்பணைக்கு வந்து செல்லுகின்றன. 

இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது ஒற்றை யானை தண்ணீர் தேடி சுற்றி வருகிறது.

இந்த யானை, ஒகேனக்கல் கணவாய் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் திட்ட வடிகால் வாரியத்தில் இருந்து வெளியேறும் நீர் சேகரிக்கும் இடமான முண்டச்சி பள்ளம் தடுப்பணையில் தண்ணீர் அருந்திவிட்டு, உணவு அருந்துவதற்காக பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்தின் காரணமாக ஓரங்களில்  நிற்கிறது. இதனைக் கண்ட ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் பயணிக்கும் போது சாலை ஓரத்தில் நின்றிருக்கும் யானையை கண்டதும் வாகனத்தை விட்டு இறங்கி, அதன் அருகில் சென்று செல்பி எடுப்பது, ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒற்றை யானை மிரண்டு துரத்தி தாக்கும் அபாய நிலை உள்ளது.

மேலும் மிரண்ட யானை சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை உடைத்து எரிகிறது. ஒகேனக்கல் வனப்பகுதிகளில் யானைகளைக் கண்டதும் சுற்றுலாப் பயணிகள் இறங்கி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வனப்பகுதியில் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com