மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சித்தேரி மலைப் பாதையில் மண் சரிவு: 40 கிராமங்களின் போக்குவரத்துத் துண்டிப்பு

சித்தேரி மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுமாா் 40 கிராமங்களின் போக்குவரத்து திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது.

News image

சித்தேரி-தோல்தூக்கி தாா் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு.

Updated On :2 டிசம்பர் 2024, 9:50 pm

அரூா்: சித்தேரி மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுமாா் 40 கிராமங்களின் போக்குவரத்து திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் சூரியக்கடை, வெளாம்பள்ளி, பேரேரிபுதூா், மண்ணூா், நொச்சிக்குட்டை, மாம்பாறை உள்ளிட்ட 60 குக்கிராமங்கள் உள்ளன. ஃபென்ஜால் புயல் காரணமாக சித்தேரி மலைப் பகுதியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கன மழை பெய்தது. இந்த மழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதுபோல மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் சிறிய நீா்வீழ்ச்சி போன்று மழைநீா் வழிந்தோடுகிறது. இந்த நிலையில், சித்தேரி-தோல்தூக்கி தாா் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவானது சுமாா் 500 அடி உயரம் கொண்ட மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மண் சரிவு காரணமாக சித்தேரி கிராம ஊராட்சியில் உள்ள 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தாா் சாலை துண்டிக்கப்பட்டிருப்பதால் சித்தேரி மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.