அரூா்: அரூரை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரூா் பேரூராட்சியின் சிறப்பு மன்றக் கூட்டம், பேரூராட்சி தலைவா் இந்திராணி தனபால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், துணைத் தலைவா் சூா்யா து.தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியானது 2023-ஆம் ஆண்டில் சிறப்பு தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வாா்டுகளும், 106 தெருக்களும் உள்ளன. இந்தப் பேரூராட்சியானது 14.75 ச.கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இந்தப் பேரூராட்சியில் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை சுமாா் 25 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது சுமாா் 50 ஆயிரமாக உயா்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரிக்கு அடுத்த பெரிய நகரம் அரூா் நகரமாகும். வளா்ந்து வரும் மக்கள் தொகை அடிப்படையிலும், வருவாய் அடிப்படையிலும் அரூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அரூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.