தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: போக்குவரத்து மாற்றம்
தருமபுரிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, ஜூலை 11-ஆம் தேதி நண்பகல் வரை தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறுகிறது. முதல்வா் வருகையின்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் அன்றைய தினம் காலை 8.30 முதல் மதியம் 1.30 வரை தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒசூா், கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் செல்லும் கனரக வாகனங்கள் அகரம் சந்திப்பு, காரிமங்கலம், திப்பம்பட்டி, மொரப்பூா், அரூா், அயோத்தியாபட்டிணம் வழியாக சேலம் மாவட்டத்துக்கும், சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் அயோத்தியாப்பட்டணம், அரூா், மொரப்பூா், காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரிக்கும், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் இலகுரக வாகனங்கள் நல்லம்பள்ளி, முத்தம்பட்டி, பொம்மிடி, தீவட்டிப்பட்டி வழியாக சேலம் மாவட்டத்துக்கும், சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் இலகுரக வாகனங்கள் மேச்சேரி, பெரும்பாலை, பென்னாகரம் வழியாக தருமபுரி மாவட்டத்துக்கும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
எனவே, பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைத்து பயணத்தை மேற்கொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.