பென்னாகரத்தில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா
பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் காமராஜா் பிறந்த தினத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த தினம் கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மா. பழனி தலைமை வகித்து, காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, பாடல் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வளா்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, அனுப்பிரியா உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல பென்னாகரம் அருகே குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மா.கோவிந்தசாமி, தலைமை வகித்து, பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
காமராஜா் பிறந்தநாளில் வயது வந்தோா் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கனகா, இல்லம் தேடிக் கல்வி ஆசிரியா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.