தவறவிட்ட கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்கள்

பென்னாகரத்தில் கீழே கிடந்த கைப்பேசி, பணம் ஆகியவற்றை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவா்கள் திருமலை, தனுஷ். இருவரும்,வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது காந்திநகா் பகுதியில் சாலையில் ஒரு கைப்பேசி மற்றும் பணம் ஆகியவை கிடந்தன. இதனைக் கண்ட மாணவா்கள் அவற்றினை எடுத்துக்கொண்டு, பென்னாகரம் காவல் நிலையத்திற்குச் சென்று காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வனிடம் வழங்கி உள்ளனா். அதனை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா், இரு மாணவா்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினாா். பின்னா் இந்தப் பொருள்களுக்கு உரியவரான காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மகன் விக்னேஷிடம் ஒப்படைத்தனா். இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளா் கருணாநிதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், காவலா்கள் உடன் இருந்தனா். கீழே தவறவிட்ட பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரு மாணவா்களையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com