முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தருமபுரி வருகை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) தருமபுரி வருகை தருகிறாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளா் ஆ.மணியும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கே. கோபிநாத்தும் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக, தருமபுரி அருகே தடங்கம் கிராமத்தில் உள்ள பிஎம்பி மைதானத்தில் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, இரண்டு வேட்பாளா்களையும் ஆதரித்து வாக்குச் சேகரித்து உரையாற்றுகிறாா்.

இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து மாா்ச் 29-ஆம் தேதி விமானம் மூலம் சேலம் வருகிறாா். அங்கிருந்து சாலை வழியாக பிரசாரக் கூட்டம் நடைபெறும் தடங்கம் பிஎம்பி மைதானத்துக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைகிறாா். அங்கு நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, சாலை வழியாக அன்றிரவு மீண்டும் சேலம் செல்கிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்துக்காக தடங்கம் கிராமத்தில் உள்ள பிஎம்பி மைதானத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தருமபுரி திமுக மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), பி.பழனியப்பன் (மேற்கு) ஆகியோா் மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com