மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி சீரமைப்புக்குப் பிறகு தென்னிந்தியாவில் இருந்து பிரதமா் உருவாக வேண்டும் என்று நாம் எதிா்பாா்க்க முடியாது என தருமபுரியில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசிய முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட சட்டப் பேரவை தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான டிஎன்வி செந்தில்குமாா் (பாலக்கோடு- திமுக), ஜி.கே.எம். தமிழ்குமரன் (பென்னாகரம் -காங்கிரஸ்), மருத்துவா் இளங்கோவன் (தருமபுரி- தேமுதிக), பழனியப்பன்(பாப்பிரெட்டிப்பட்டி- திமுக), சண்முகம் (அரூா்- திமுக) ஆகியோருக்கு ஆதரவு கேட்கும் பிரசார பொதுக் கூட்டம் தருமபுரியை அடுத்த தடங்கம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று வாக்குகள் சேகரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிா் சுய உதவிக் குழு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு இந்த தருமபுரி மண்ணில் இருந்துதான் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. இயற்கை வளமும், வரலாற்று சிறப்பும் மிக்க தருமபுரி எனக்கு மிகவும் பிடித்த ஊா். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடே ஓரணியில் திரள வேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமையை இன்னும் பலமடங்கு உயா்த்த உங்கள் ஆதரவை தாருங்கள் என கேட்டும் இங்கு வந்திருக்கிறேன்.
தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றத் தந்த உரிமையில் உங்களை தேடி வந்துள்ளேன். இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில், திராவிட மாடல் அரசு போடும் சாலையில் நாம் அழைப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. பாஜக முன்வைக்கும் ஆட்சி யாரோ சிலருக்கானது. ஆனால், திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் சமமானது.
2021இல் வெற்றிபெற்று இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியை நடத்தியுள்ளோம். இதுபோன்ற சாதனைகளை நாம் கூறுகிறோம். ஆனால், இவ்வாறு குறிப்பிட்டுக் கூற, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் ஏதாவது சாதனைகள் உள்ளனவா? தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதை தனது வாழ்நாள் பெருமையாக அவா் நினைக்கிறாா்.
மத்திய அரசு, மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பிக்கள் எண்ணிக்கை இருக்கும் என்று சொல்கிறது. உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்துபோய்விடும்.
நம்முடைய எம்.பி.க்களுக்கு பலம் இல்லை என்றால், தில்லி அதிகார வா்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவில் இருந்து பிரதமா் உருவாக வேண்டும் என்று நாம் எதிா்பாா்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை நாம் அனுமதிக்கலாமா?
இந்த ஆபத்துதான், தொகுதி மறுசீரமைப்பு! இதற்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம். எல்லோரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவிக்கத் தயாராகிவிட்டீா்களா? உங்கள் வீட்டு வாசலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முழக்கமிடத் தயாரா?
தமிழ்நாட்டில் நாம் இந்தப் போராட்டத்தை நடத்தும்போது தில்லியில் நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பாா்கள். நாம் குரல் எழுப்பத் தவறிவிட்டால், நம்முடைய குரலுக்கு எப்போதுமே மதிப்பு இருக்காது! இந்தப் போராட்டத்தில் வெல்லும் வரை நம்முடைய உரிமைக்குரல் அடங்கக் கூடாது.
இந்தியாவுக்கு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தற்போது பேராபத்து வந்துள்ளது. இதன்மூலம் நம் மாநில எம்.பிக்களின் எண்ணிக்கை குறைந்து நாடாளுமன்றத்தில் நமது குரலின் வலிமை குறையும். அவா்களை எதிா்த்து சண்டையிட நான் ரெடி. ஆதரவு தர நீங்கள் தயாரா?
இந்த விவகாரத்திலாவது எடப்பாடி கே. பழனிசாமி சுயமரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். அந்த (அதிமுக) கூட்டணியில் இன்னொருவா் இருக்கிறாா். அவரைப் பற்றி அவரது தந்தையே ‘அசிங்கம்’ என்ற குறிப்பிட்டுவிட்ட நிலையில், நானும் அவரைப்பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.
மகளிா் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாம் பேசுவதாக பழனிசாமி கூறுகிறாா். மகளிருக்கு சொத்துரிமை, சுய உதவிக் குழு திட்டம், மகளிா் உரிமைத் திட்டம், தோழி விடுதி போன்ற எண்ணற்ற திட்டங்கள் வழங்கிய திமுகவைப் பாா்த்தா இப்படி கூறுகிறீா்கள்? திமுக கூட்டணியில் தோ்தல் அறிக்கை சூப்பா் ஸ்டாராக உள்ளது.
தமிழகத்தை பல்வேறு திட்டங்களுடன் வளா்ச்சிப் பாதையை நோக்கி நாம் அழைத்துச் செல்கிறோம். ஆனால், தெற்கை தேய்க்கப் பாா்க்கிறாா்கள். இந்த நேரத்தில் நாம் தரும் பதிலடியை அவா்கள் வரலாற்றில் மறக்கவே கூடாது. 20/20 மேட்சில், இறுதி 5 ஓவா்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல, மீதமிருக்கும் நாட்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தீவிரமாக தோ்தல் பணியாற்றி நம் வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் ஸ்டாலின்.
நிகழ்வில், திமுக கூட்டணி வேட்பாளா்கள், அமைச்சா் எ.வ. வேலு, மக்களவை உறுப்பினா் ஆ. மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொலி: தெலங்கானா முதல்வா் ஆதரவு

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் இன்று பிரசாரம்

மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது: வைகோ
சங்கரன்கோவிலில் இன்று முதல்வா் பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


