திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக தயவில்தான் தவெக ஆட்சி! மு.க. ஸ்டாலின்

அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பேசியது...

News image

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் - நிகழ்வில் மு.க. ஸ்டாலின் - DMK

Updated On :6 ஜூன் 2026, 3:09 pm IST

இப்போது தவெக ஆட்சி நடப்பது திமுக தயவில்தான் என்றும் நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் இன்று திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

எப்போதுமே ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆளுங்கட்சி அல்ல; ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள். அப்படி வந்திருக்கும் உங்களை எல்லாம் நான் மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.

இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், "நான் பல ஆண்டு காலம் அ.தி.மு.க.விற்குப் பணியாற்றி இருக்கிறேன்; இரண்டு முறை தேர்தல் களத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்; இருந்தாலும், அந்த இயக்கத்தில் இருந்தபோது நான் விசுவாசமாகப் பணியாற்றி இருக்கிறேன்" என்பதை வெளிப்படையாக அவர் எடுத்துச் சொன்னார். நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

எப்போதுமே ஒருவன், ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, ஒரு செயல் வீரனாக இருந்தாலும் சரி, ஒரு தளகர்த்தராக இருந்தாலும் சரி, தளபதியாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, தான் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருந்திட வேண்டும். எனவே, நிச்சயமாக தி.மு.க.வில் இணைந்திருக்கும் கஜேந்திரன் அவர்கள், நிச்சயமாக தி.மு.க.விற்கு விசுவாசமாக இருந்து பணியாற்ற இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்கிறேன். அவர் மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் நீங்களும் அப்படித்தான் இருக்கப் போகிறீர்கள்.

தி.மு.க.வினுடைய வரலாறு என்பது, 1949-இல் தொடங்கி, அதற்குப் பிறகு நடைபெற்ற 1952-இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னாலும், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு, 1962-இல் தேர்தல் களத்தில் ஈடுபட்டு, நாம் எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெறும் அளவிற்கு 50 இடங்களில் அன்றைக்கு வெற்றி பெற்றோம். அதற்குப் பின்னால் 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.

அண்ணா மறைவிற்குப் பிறகு, கலைஞர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அதற்குப் பிறகு 1971-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். 1971-இல் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில்தான், 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை நாம் எதிர்த்தோம். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்பதைத் தெரிந்தே எதிர்த்தோம். நாம் கவலைப்படவில்லை. கலைஞர் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், "ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகம் தான் நமக்கு முக்கியம்" என்று கருதி, அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, தீர்மானம் போட்டு அன்றைக்கு நிறைவேற்றினார்கள். "நெருக்கடி நிலையை ரத்து செய்யுங்கள்; கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யுங்கள்" என்று தீர்மானம் போட்டார்கள்.

அந்தத் தீர்மானம் போட்ட காரணத்தால், 1976-ஆம் ஆண்டு நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 13 ஆண்டு காலம் நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை.

மீண்டும் 1989-இல் ஆட்சிக்கு வந்தோம். 1991-இல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தி.மு.க. துணை நிற்கிறது என்ற ஒரு பிரசாரத்தை நடத்தி, அதற்காக நம்முடைய ஆட்சியைப் கலைத்தார்கள்.

அதற்குப் பிறகு 1996-இல் நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 2001-இல் நடைபெற்ற தேர்தலில் தோற்றோம். 2006-இல் ஆட்சிக்கு வந்தோம். 2011-இல் தோற்றோம். அதற்குப் பிறகு 2021-இல் ஆட்சிக்கு வந்தோம்.

இதை எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், வெற்றி தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் தி.மு.க.காரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் தான், இன்றைக்கு வெற்றி வாய்ப்பை நாம் இழந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை நாம் இழந்திருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் எல்லாம் இங்கு வந்து சேர்ந்திருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும்; தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள், "நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடத்தில் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம்" என்று சொன்னார்கள்.

அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், "நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பி.ஜே.பி. ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன்."

எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம் என்றார்.

Summary

TVK governance depends on the DMK goodwill: M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.