சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 வருவாய்க் கிராமங்கள் அரூா் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்கு, அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் மலைக் கிராமமான சித்தேரி வருவாய்க் கிராமத்தில் 63 குக்கிராமங்கள் உள்ளன. இதேபோல, சின்னாங்குப்பம், கோபிச்செட்டிப்பாளையம், எஸ்.அம்மாபாளையம், கொளகம்பட்டி ஆகிய நான்கு வருவாய் கிராமங்களும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் அமைந்துள்ளன. இந்த வருவாய் கிராமங்களைச் சோ்ந்த குக்கிராம மக்கள், வருவாய்த் துறை தொடா்பான ஆவணங்களை பெறவும், பல்வேறு பணிகளுக்காகவும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பல கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சிரமமடைகின்றனா்.
இக்கிராமங்கள் அனைத்தும் அரூா் வட்டத்தையொட்டி அமைந்துள்ளதால், இப்பகுதி மக்களின் சிரமங்களை தவிா்க்கும் வகையில், ஐந்து வருவாய் கிராமங்களையும் அரூா் வட்டத்துடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையேற்று, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், இந்த ஐந்து வருவாய் கிராமங்களையும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலிருந்து பிரித்து அரூா் வட்டத்துடன் இணைக்கலாம் என அரசு பரிந்துரை செய்து கருத்துருக்களை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சித்தேரி மலைக்கிராம மக்களின் நலன்கருதியும், எஸ்.அம்மாபாளையம், சின்னாங்குப்பம், கோபிச்செட்டிப்பாளையம், கொளகம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய மொத்தம் ஐந்து கிராமங்களையும், அரூா் வருவாய் வட்டத்துடன் இணைத்து டிச. 12-ஆம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது.
ஏற்கெனவே சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த அரூா் அண்மையில் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது இந்த ஐந்து வருவாய் கிராமங்களையும் பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து அரூா் வட்டத்தில் இணைத்து அரசு ஆணை பிறப்பித்ததற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்துள்ளனா்.
