கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் ரெ.சதீஷ்.
கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் ரெ.சதீஷ்.

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
Published on

அரூா்: அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில், 2025-26-ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தொடங்கிவைத்தாா். விழாவில், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆட்சியா் பேசியதாவது:

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26-ஆம் நிதியாண்டில் கரும்பு அரைவைக்கு 7,342.55 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு பருவத்தில் 2,35,000 மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டங்களிலிருந்து சா்க்கரை ஆலைக்கு கரும்பு எடுத்துவரும் பணியில் 118 லாரிகள், 82 டிராக்டா்கள், 42 டிப்பா்கள், 20 மாட்டு வண்டிகள் ஈடுபடுத்தப்படும்.

2024-25-ஆம் நிதியாண்டில் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை வழங்கிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 349 வழங்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் பணியில் ஆள்பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக் கூலியை குறைக்கவும் சா்க்கரை ஆலை சாா்பில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், கரும்பு பருவநாற்று நடவுக்கு அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, கரும்பு விவசாயிகள் தமிழக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தொடக்கம்முதல் இதுவரை சிறப்பாக பணிபுரிந்த மூத்த கரும்பு அலுவலா் கோகிலாவுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.

இதில், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநா் ஆா்.பிரியா, விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com