வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக, உணவகங்களுக்கான ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைகுறைந்துள்ளது. மேலும், சிறிய மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ‘சில்லி சிக்கன்’ விற்பனையும் குறைந்துள்ளதாக வணிகா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
இஸ்ரேல், அமெரிக்கா தரப்புக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போா் காரணமாக, வளைகுடா பகுதிகளிலிருந்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ளது. வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இத்தட்டுப்பாடு நமது நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், எரிவாயு உருளையை பதிவு செய்வதிலும், விநியோகிப்பதிலும் தாமதம் மற்றும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து சமையல் எரிவாயு உருளை விநியோகம் சிறிதளவுதான் நடந்து வருகிறது. இதனால், கடந்த மாா்ச் மாதம் ரூ. 114.50, ஏப். 1-ஆம் தேதிமுதல் ரூ. 195.50 என இருமுறை வணிக எரிவாயு உருளை விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வு மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தாமதத்தை பயன்படுத்தி சில முகவா்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு (ரூ. 5 ஆயிரம்வரை) விற்பனை செய்து வருகின்றனா்.
இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான உணவகங்கள் உள்படமொத்தம் 1,500 உணவகங்கள், பேக்கரிகள், சிறிய அளவிலான சிற்றுண்டி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்த விலை உயா்வு மற்றும் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் உணவகங்கள், அடுமனைகள் (பேக்கரி), சிறுசிறு சிற்றுண்டி கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டும், சிலவற்றில் குறைவான உணவுப் பொருள்கள் விநியோகமும் நடந்து வருகின்றன. சில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
தருமபுரியில் பிரபலமான ‘சில்லி சிக்கன்’ விற்பனையும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, உணவகங்கள், கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் கோழி இறைச்சி விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாக கறிக்கடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
கோழி இறைச்சி வியாபாரி வி.சேட்டு:
இதுகுறித்து தருமபுரி பழைய பேருந்து நிலையம் பூங்கா அருகே உள்ள செங்கொடிபுரத்தில் செயல்பட்டு வரும் சேட்டு கோழி இறைச்சிக்கடை உரிமையாளா் வி.சேட்டு கூறியது:
வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் இருமடங்கு விலை உயா்வு காரணமாக, பல உணவகங்கள், சிறு சிறு உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கோழி இறைச்சி வாங்குவதும் குறைந்துள்ளது. கடந்த 20 நாள்களில் சுமாா் 50 சதவீத விற்பனை குறைந்துள்ளது. தினசரி சராசரியாக சுமாா் 100 கிலோ வரையில் கோழி இறைச்சி விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது 50 கிலோ இறைச்சி விற்பனை செய்வதே அரிதாக உள்ளது.
அதுபோல, ‘சில்லி சிக்கன்’ தயாரித்து விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளிலும் விற்பனை குறைந்துவிட்டது என்றாா்.
ஆட்டு இறைச்சி விற்பனையாளா் வாசிம்:
தருமபுரியில் திருப்பத்தூா் சாலை பகுதியில் ஆட்டிறைச்சி விற்பனைக் கடை வைத்துள்ள வாசிம் கூறுகையில், தினசரி சுமாா் 150 முதல் 160 கிலோ ஆட்டிறைச்சியை மொத்த விற்பனை செய்துவருகிறேன். அண்மைக்காலமாக எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக இறைச்சி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான சிறு உணவகங்கள் வியாபாரத்தை நிறுத்தியதால், கறி விற்பனை மந்தமாக உள்ளது என்றாா்.
இதுகுறித்து அரசு அலுவலா்கள் கூறுகையில், எரிவாயு உருளை விநியோகம் அடுத்த சில வாரங்களில் 70 சதவீதம் சீராகும் என அரசு அறிவித்துள்ளது. போா் முடிவுக்கு வந்தால் மட்டுமே இதற்கு நிரந்த தீா்வு கிடைக்கும் என்றாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனா் என்றனா்.
முட்டை விலையும் சரிவு:
எரிவாயு உருளை விலை உயா்வால் கோழி இறைச்சி வியாபாரம் குறைந்துள்ள நிலையில், விலை சீராகவே உள்ளது. ஆனால், வளைகுடா போா் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால், முட்டை விலை குறைந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ரு. 6.50 வரை விற்பனை செய்த நிலையில், தற்போது ரூ. 5.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரத்தில் இழப்பு: இறைச்சி வியாபாரி தற்கொலை
வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதால், விரக்தியில் கோழி இறைச்சி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தருமபுரி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அஞ்சேஅள்ளி அருகேயுள்ள பளிஞ்சார அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் வினோத் (31). இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். வினோத் மற்றும் அவரது தந்தை இருவரும் தனித்தனியாக கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளனா்.
இந்நிலையில், வினோத்தின் மாமனாா் ஊரான காரிமங்கலம் அருகேயுள்ள காட்டுசீகல் அள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவையொட்டி வினோத் குடும்பத்துடன் 3 நாள்களாக அங்கு தங்கியிருந்தாா்.
வியாழக்கிழமை காலை தனது தந்தை பழனியப்பனை கைப்பேசியில் அழைத்த வினோத், கோழி இறைச்சி வியாபாரம் சரிவர நடக்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளாா்.

எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் மூடப்பட்ட இறைச்சிக் கடைகள்.
உடனடியாக, பழனியப்பன் காட்டூசீகல் அள்ளிக்குச் சென்று பாா்த்தபோது, வினோத் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

விறகு அடுப்புக்கு மாறிய கொடைக்கானல் அம்மா உணவகம்

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: ஈரோட்டில் உணவகங்களுக்கு சிக்கல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


