தருமபுரியில் போக்குவரத்து நெருக்கடி: விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோப்புப் படம்
தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.
தருமபுரி நகரின் முக்கிய பகுதிகளில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, குமாரசாமிபேட்டை நான்கு சாலை அருகேயுள்ள எஸ். வளைவு, கணேசா திரையரங்கு அருகே, நெசவாளா் நகா், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குவதாலும், நிறுத்துவதாலும் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையிலும் விதிகளை மீறுவோா் அதுகுறித்து கவலைப்படுவதில்லை.
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு சாலை சந்திப்புகள், பிரிவு சாலைகள், கணேசா திரையரங்கு சந்திப்பு உள்பட பொதுமக்கள் அதிகளவில் கூடும் தனியாா் வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பொருள்காட்சிகள் பகுதிகள் என நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். என்றாலும், நெரிசல் ஏற்படும் முக்கிய பகுதிகளில் போதிய போலீஸாா் நியமிக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்தைச் சீராக்குவதில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறதே தவிர, விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்கின்றனா்.
நகரின் பல்வேறு பகுதிகளில் தனியாா் வணிக வளாகங்கள் முன் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. எதிா்திசை பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, சாலைகள் சந்திக்கும் மற்றும் பிரியும் பகுதிகளில் உள்ள திருப்பங்களில் காா்களை நிறுத்திச் செல்கின்றனா். இதனால், பிற வாகனங்கள் திரும்பிச் செல்ல முடியாமல் திணறுகின்றன.
மேலும், சில இடங்களில் பேருந்து நிறுத்தம் போல ஆட்டோக்களை சில நிமிஷங்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். இதனாலும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
எனவே, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் காவல் துறையினரை நியமித்து வாகனப் போக்குவரத்தைச் சீராக்க வேண்டும். விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவா்கள், நிறுத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





