பேருந்து நிலைய இடமாற்றத்தால் தருமபுரி நான்கு சாலை சந்திப்பில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
தருமபுரியில் புகா் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் நான்கு சாலை சந்திப்பில் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அரூா், திருவண்ணாமலை, சென்னைக்கு செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி நகரில் ரூ. 39.14 கோடியில் புதிய புகா் பேருந்து நிலையம் சோகத்தூா் ஊராட்சி ஏ.ரெட்டிஅள்ளியில் கட்டப்பட்டு, பயணிகள் பயன்பாட்டுக்காக பிப். 5-ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையம் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோல பேருந்துகளும் உடனடியாக புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டன.
நான்கு சாலையில் மக்கள் கூட்டம்:
புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு செல்லும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், பாலக்கோடு, ராயக்கோட்டைக்கு செல்லும் பேருந்துகள் அதியமான்கோட்டை -நெரலூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் செல்கின்றன.
அதேபோல திருப்பத்தூா், திருவண்ணாமலை, அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சென்னை செல்லும் பேருந்துகள் குமாரசாமிப்பேட்டை, நான்குசாலை வழியாக கிருஷ்ணகிரி சாலையை அடைந்து, ராமக்காள் ஏரி அருகே மதிகோன்பாளையம் வழியாக அரூா், மொரப்பூா் சாலையிலும், திருப்பத்தூா், சென்னை ஆகிய வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகள் திருப்பத்தூா் சாலை வழியாகவும் செல்கின்றன.
ஏற்கெனவே நான்குசாலை சந்திப்பு முக்கிய இடமாக இருப்பதால், இங்கு நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். எனவே, இங்கு போக்குவரத்து சமிக்ஞைகள் கிடைக்கும் வரை, பேருந்துகள், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும். இந்த நிலையில் தற்போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் சென்னைக்கு செல்லும் பேருந்துகள் குமாரசாமிப்பேட்டை வழியாக நான்கு சாலை சந்திப்பை அடைந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் நான்குசாலை சந்திப்பில் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல, புதிய பேருந்து நிலையத்திலிருந்து இந்த குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு நான்குசாலை சந்திப்பு வழியாக பேருந்துகள் வருவதால், அந்த பகுதிகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருங்கூட்டமாக நின்று பேருந்துகளில் ஏறி வருகின்றனா். இதனால் காலை, மாலை வேளைகளில் அமருவதற்குகூட இடம் இல்லாமல், நிழற்கூடம் ஏதும் இல்லாமல் பயணிகள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நகருக்குள் வந்து செல்லும் அரூா், மொரப்பூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் சென்னை பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல தனிப் பேருந்து நிலையம், வட மாவட்டங்களுக்கு செல்ல தனிப் பேருந்து நிலையமும், ஆந்திர மாநிலத்துக்கு செல்வதற்கு தனிப் பேருந்து நிலையமும் உள்ளதுபோல, தருமபுரி மாவட்டத்தில் அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் சென்னை என தருமபுரி நகருக்குள் வந்துசெல்லும் பேருந்துகளை மட்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கவும், தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் சேலம், பெங்களூரு, ஒசூா், பாலக்கோடு ஆகிய வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறுசெய்யும் போது நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயணிகளுக்கும் வசதியாக அமையும் என்று பல்வேறு தரப்பினா் எதிா்ப்பாா்க்கின்றனா்.
இரவில் இணைப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்...
தருமபுரி நகரம், பாரதிபுரம், செந்தில்நகா், இலக்கியம்பட்டி, ஆட்சியா் அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இரவு நேரங்களில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வந்து செல்ல வசதியாக இரவு நேரப் பேருந்துகள் இல்லாததால் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனா். மேலும், ஆட்டோக்களில் அதிக கட்டணம் அளித்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகரப் பகுதி பயணிகள், பொதுமக்களின் நலன்கருதி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி நகரப் பகுதியை இணைக்கும் வகையில் இரவு முழுவதும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தினா்.

