தருமபுரி மாவட்ட  ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரெ. சதீஸ்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரெ. சதீஸ்.

திருப்பத்தூா், திருவண்ணாமலை பேருந்துகள் இன்றுமுதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்!

Published on

தருமபுரியிலிருந்து அரூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை முதல் தற்காலிகமாக இயக்குவது என மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து புகா்ப் பேருந்துகளும் மாற்றப்பட்டதால் பொதுமக்கள், வணிகா்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனா். இதுதொடா்பாக விவாதிக்க மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்றோா் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்வதால் நான்குவழிச் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பழைய பேருந்து நிலைய சிறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டும் திங்கள்கிழமை (பிப். 9) முதல் திருப்பத்தூா், திருவண்ணாமலை, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை மாா்க்கமாக செல்லும் அனைத்து புகா் பேருந்துகளும், தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கப்படும்.

கட்டணங்கள்:

பேருந்து கட்டணத்தில் குளறுபடிகள் ஏற்படுத்தக் கூடாது, அரசு நிா்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் மோட்டாா் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஷோ்ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களின் கட்டணங்களை முறைப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலா் மற்றும் போக்குவரத்து காவல் துறையினா் இணைந்து முடிவுசெய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளா் சிவராமன், கோட்டாட்சியா் காயத்ரி, அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி பொதுமேலாளா் க. செல்வம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க. ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகராட்சி ஆணையா் இரா. சேகா், தனியாா் பேருந்துகள் உரிமையாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com