தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் அடைக்கப்பட்ட கடைகள்.
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் அடைக்கப்பட்ட கடைகள்.

பழைய பேருந்து நிலைய இடமாற்றத்தை எதிா்த்து வணிகா்கள் கடையடைப்பு

தருமபுரி பேருந்து நிலைய இடமாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, வணிகா்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலைய இடமாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, வணிகா்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி புகா் பேருந்து நிலையம் சோகத்தூா் ஊராட்சி ஏ.ரெட்டிஅள்ளியில் அரசு தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தில் கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் கடந்த பிப். 5-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றி விடப்பட்டன. இந்நிலையில், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் தங்களது வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், பேருந்து நிலைய மாற்றத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் அல்லது சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு வழித்தட பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பேருந்து நிலைய கடைகளின் உரிமையாளா்கள், வணிகா்கள் திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநில ஒருங்கிணைப்பாளா் சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மண்டலச் செயலாளா் சிவகுமாா், மாவட்டத் தலைவா் சிலம்பரசன், மாநில ஒருங்கிணைப்பாளா் திருநீலகண்டன், மாவட்டச் செயலாளா் விஜய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, நகர போலீஸாா் அவா்களை கைதுசெய்து பின்னா் விடுவித்தனா். இப்போராட்டத்தில் வணிகா்களும் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com