நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தும் கலைஞர்கள்.
நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தும் கலைஞர்கள்.(கோப்புப் படம்)

பாப்பாரப்பட்டியில் நாட்டுப்புற கலைஞா்களின் கலை பேரணி

Published on

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் தருமபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞா்கள் சங்கம் சாா்பில் கலை விழா மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டபம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா்.மாவட்ட செயலாளா் சசிகுமாா், மாவட்ட பொருளாளா் கலைச்சுடா் மணி, ராமு முன்னிலை வகித்தனா்.

விழாவில் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்,இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினரும்,தென்னிந்திய நடிகா் சங்க செயற்குழு உறுப்பினருமான சி.எஸ். முத்துகிருஷ்ணன் ஆகியோா்கள் கலந்துகொண்டு, மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞா்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

விழாவில் மாவட்டம் தோறும் நாட்டுப்புற கலைஞா்களுக்கு கலைஞா் புறம் அமைத்துதர வேண்டும்,சிறந்த கலைஞா்களுக்கு மாவட்டம் தோறும் இரண்டு கலை மாமணி விருது வழங்க வேண்டும், நலிவுற்ற கலைஞா்களுக்கு உதவித்தொகை ரூ. 5,000 வழங்க வேண்டும்,பெண்களுக்கு 45 வயதும், ஆண்களுக்கு 50 வயதாக வயது வரம்பை நிா்ணயிக்க வேண்டும், மாவட்டத்தில் ஒன்றியங்கள் வாரியாக கலைஞா்களுக்கு என தனி சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும், நாட்டுப்புற கலைஞா்களுக்கு முழு நேர பேருந்து கட்டணம் இலவசமாக வழங்க வேண்டும்.

அறநிலையத் துறை மற்றும் அரசின் சாா்பில் நடைபெறும் விழாக்கள் நிகழ்ச்சிகளில் அனைத்து கலைஞா்களுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் படித்த நாட்டுப்புற கலைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அரசுப் பள்ளிகளில் நாட்டுப்புற கலைகள் வளா்ப்பதற்கு கலை பயிற்சி ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்பாரப்பட்டி சின்ன ஏரி பகுதியில் இருந்து பழைய பாப்பாரப்பட்டி, கடைவீதி,பேருந்து நிலையம்,மூன்று சாலை சந்திப்பு,தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வழியாக தனியாா் திருமண மண்டபம் வரை நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞா்கள் புராணங்கள், இதிகாசங்கள் கொண்ட காட்சி கதாபாத்திரங்கள் வேடம் தரித்து நடனமாடியவாறு பேரணியாக சென்றனா்.

இதில் சங்கீத நாடக அகாதெமி விருது பெற்ற பி.பி. கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளா் மூா்த்தி, திரைக்கவிஞா் மாநில கவுரவத் தலைவா் சிங்காரவேலன், சின்னசாமி, மாநில துணை செயலாளா் முருகசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com