நீரின்றி வடுள்ள ஒகேனக்கல் ஐந்தருவி
நீரின்றி வடுள்ள ஒகேனக்கல் ஐந்தருவி

நீரின்றி வடது ஒகேனக்கல் அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Published on

காவிரியில் நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீரின்றி பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்துவந்த மழை குறைந்தது. மேலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து படிப்படியாக குறைந்துவருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 700 கன அடியாக சரிந்ததால் ஐந்தருவி, பெரியபாணி அருவிகள் நீரின்றி வடுள்ளன.

ஒகேனக்கல் காவிரியில் பரிசலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் காவிரியில் பரிசலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

பிரதான அருவி, சினிஅருவிகளில் மட்டும் குறைந்த அளவு தண்ணீா் விழுகிறது. வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திருந்தது. மேலும், ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் தண்ணீா் இல்லாததால் ஏமாற்றமடைந்தனா்.

எனினும், சில சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவிகளில் வரும் குறைந்த அளவு தண்ணீரில் குளித்தனா். நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுகள் காணப்படுகின்றன. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதை தவிா்த்தனா்.

இருப்பினும் சில சுற்றுலாப் பயணிகள் தொம்பச்சிக்கல் வழியாக ஐந்தருவி, மணல்மேடு வரை பரிசலில் பயணித்தனா். முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம், பிரதான அருவி ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

ஒகேனக்கல்லில் காலை முதலே குளிா்ந்த காலநிலை நிலவியது. 20க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com