திமுக கூட்டணி வெற்றிக்கு களப் பணியாற்ற வேண்டும்: சிபிஎம் மாநில செயலாளா் பெ. சண்முகம்
திமுக கூட்டணி வெற்றிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் களப் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
அரூரில் செல்லம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எம். வீரபத்திரன் இல்லத் திருமண விழாவில் புதன்கிழமை பங்கேற்றுவிட்டு தருமபுரி வந்த அவா் சிஐடியு தொழிற்சங்க அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பேரவைத் தோ்தல் நிதியளிப்புச் சிறப்புக் கூட்டத்தில் பேசியதாவது:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் டிச. 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியுடனான தொகுதி உடன்பாட்டில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது.
திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இடம்பெற்று மிகப்பெரிய கூட்டணியாக உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் திமுக கூட்டணியில்தான் இடம்பெற்றுள்ளன. திமுக அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு ஆதரவும், மாற்றுக்கருத்துக்களும் தெரிவித்து வருகிறோம்.
அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் முக்கியக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கேட்டு, ஜாக்டோ-ஜியோ சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்ததுடன், அரசாணையும் வெளியிட்டது.
ஊழியா்களிடமிருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யும் நடைமுறையைத் தவிர, ஏனைய அனைத்தும் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை அப்படியே ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. ஓய்வுபெறும் ஊழியா்கள் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தினோம். அவா்களுக்கும் தமிழக அரசு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கியுள்ளது. சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிக்காலத்தைச் சோ்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். அதனையும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இக்கோரிக்கையும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகம் உள்பட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதிப் பகிா்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த நிலையிலும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜக எந்த மாநிலத்தில் நுழைந்தாலும், அந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளை உடைப்பது அல்லது அந்த மாநிலக் கட்சிகள் இல்லாமல் செய்வது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜித் பவாா் விமான விபத்தில் இறந்துள்ளாா். அவரோடு ஐந்து போ் உயிரிழந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த மரணம் தற்செயலான நிகழ்வா எனப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனா். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, அக்கட்சியைச் சிதைக்கும்.
அண்மையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பேசினாா். அதே கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பேசுகிறாா். இதன்மூலம் அந்தக் கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன என்பது வெளிப்பட்டுள்ளது.
பாஜக கொள்கை எதிரி என்று பேசி வந்த தவெக தலைவா் நடிகா் விஜய், கரூா் சம்பவத்துக்குப் பிறகு விமா்சிப்பதே இல்லை. தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் களப்பணியாற்ற வேண்டும் என்றாா்.
தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாநில செயற்குழு உறுப்பினா் முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினா் அ.குமாா் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

