இருமத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
இருமத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஒன்றியம், இருமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமைவகித்து தொடங்கிவைத்தாா்.
முகாமில், 10 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், 15 பழங்குடியினா் மக்களுக்கு பழங்குடியினா் நலவாரிய அடையாள அட்டைகள், 15 மருத்துவ பயனாளி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 7 பேருக்கு கலைஞா் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியா் 9 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை ஆட்சியா் வழங்கினாா்.
முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதில், தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

