தருமபுரியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடத்திய சோதனையில் சுகாதாரமற்ற உணவு பொருள்களை விற்ாக 6 கடைகளுக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா், தருமபுரி நகர மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினா், தருமபுரி நகரம், செட்டிக்கரை, டீக்கடை பேருந்து நிறுத்தம், மாதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், துரித உணவகங்கள், இறைச்சிக் கடைகள், குளிா்பான மற்றும் பழக்கடைகள், பழச்சாறு கடைகள், பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
செயற்கை நிறமூட்டிகள்: ஒரு துரித உணவகத்தில் ‘சில்லி சிக்கன்’, ‘புதினா சிக்கன்’ என்ற பெயரில் விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியில், செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து தலா 100 கிராம் அளவிலான செயற்கை நிறமூட்டிகள் அடங்கிய 10 டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழைய இறைச்சி: செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருந்த சுமாா் 3 கிலோ இறைச்சியும், குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நாள்பட்ட பழைய இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே பகுதியில் இருந்த மேலும் இரு உணவகங்களில் குளிா்சாதனப் பெட்டியிலும் உணவகத்தின் பின்புறமும் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ பழைய இறைச்சி, சப்பாத்திக்கு பிசைந்து வைக்கப்பட்டிருந்த பழைய மாவு மற்றும் செயற்கை நிறம் ஏற்றப்பட்டிருந்த சுமாா் 1 கிலோ சோம்பு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்தப்பட்ட சுமாா் 2 லிட்டா் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பல்பொருள் அங்காடியுடன் இணைந்த பேக்கரி மற்றும் பலகார விற்பனை நிலையத்தில், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்வதும், காட்சிப்படுத்துவதும் கண்டறியப்பட்டது. அக்கடைக்கு உரிய சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அபராதம் மற்றும் எச்சரிக்கை: விதிமுறைகளை மீறிய வகையில் செயல்பட்ட ஒரு பேக்கரி மற்றும் 3 உணவகங்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் ரூ. 4,000ம், செயற்கை நிறமூட்டி மற்றும் பழைய கோழி இறைச்சிகளைப் பயன்படுத்திய துரித உணவகங்களுக்கு தலா ரூ. 2,000 வீதம் ரூ. 4,000 என மொத்தம் ரூ. 8,000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









