தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீ விபத்து; இயந்திரங்கள் சேதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொம்மனூரில் தனியாா் தேங்காய் நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், நாா்ப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பாலக்கோடு அருகே பொம்மனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா், அப்பகுதியில் சொந்தமாக தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் நாா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மெத்தை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல பணிகள் முடிந்ததும் தொழிலாளா்கள் தொழிற்சாலையைப் பூட்டிவிட்டுச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை தொழிற்சாலையின் உள்ளே இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனா்.
இருப்பினும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் நிகழ்விடத்துக்கு வருவதற்குள் தீ தொழிற்சாலை முழுவதும் மளமளவெனப் பரவி எரியத் தொடங்கியது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
எனினும், இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் நாா்ப்பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து மின்கசிவு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அணுகுசாலை வசதி இல்லாததால் தீயணைப்பு வாகனம் தாமதம்: தருமபுரி தடங்கத்திலிருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூா் வழியாக புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், பொம்மனூா், ஜக்கமுத்திரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்வதற்கான சாலை வசதி துண்டிக்கப்பட்டது.
இதனால் சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு ராயக்கோட்டை சாலையில் சென்று, மீண்டும் அணுகுச்சாலை வழியாக இந்த கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை தற்போது நிலவி வருகிறது. இதனால், தீ விபத்து ஏற்பட்டபோது தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்துக்கு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, தங்களது கிராமங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் அணுகுச்சாலை மற்றும் மேம்பாலம், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை அமைத்துத் தர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







