ஒசூரில் தகராறைத் தடுக்கச் சென்ற தொழிலாளி குத்திக் கொலை; 3 பேர் படுகாயம்

ஒசூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறைத் தடுக்கச் சென்ற தொழிலாளி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
Updated on
1 min read

ஒசூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறைத் தடுக்கச் சென்ற தொழிலாளி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 25). இவரும், நல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சவுமியாவும் (20)  காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் ஒசூர் சின்ன எலசகிரி அனுமந்த் நகர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியுள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சவுமியாவின் பெரியப்பா மகள்கள், அவரைப்  பார்ப்பதற்காக அனுமந்த் நகருக்குச் சென்றனர். இதை அறிந்த அவர்களது உறவினர்களான நல்லூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது சுரேஷ் தரப்புக்கும் வெங்கடேஷ் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கடேஷின் நண்பர் ஹரிஸ் (28),  ஹரிஸின் பெரியப்பா மகன் மஞ்சுநாத் (25), ஹரிஸ் அண்ணன் நாகேஷ் (29) ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர்.
அப்போது, அனுமந்த் நகரில் வெல்டிங் கடை வைத்துள்ள சின்ன எலசகிரியைச் சேர்ந்த கமலகண்ணன் (25) என்பவர் தகராறைத் தடுக்கச் சென்றார்.  இதில் அவரது இடது மார்பு பகுதியில் கத்திக் குத்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.
படுகாயமடைந்த ஹரிஸ், மஞ்சுநாத், நாகேஷ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள சுரேஷ் மற்றும் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com