தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை ஜாதி ஒழிப்பு சட்டமாக திருத்தம் செய்ய வேண்டும் என ஒசூரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒசூர் ராம் நகரில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் வீரபாண்டியன், சிபிஎம் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சம்பத், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 9 தீர்மானங்களை விளக்கி பேசினார். ஒசூர் அருகே நடைபெற்ற நந்தீஷ், சுவாமி ஆவணப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பேசினார். அம்பேத்கர் இயற்றிய தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மாற்றி ஜாதி ஒழிப்புச் சட்டமாக திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கூறினார்.
கன்னியாகுமரியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். ஆனால் அவருடைய கொள்கைக்கு எதிராக பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
இந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இளவரசன் கொலை நடைபெற்றபோது தருமபுரியில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்திய திராவிட கழகத் தலைவர் கீ.விரமணி மாநாடு நடத்தினார். அதேபோன்று ஒசூரில் நந்தீஷ் சுவாதி படுகொலையை கண்டித்து ஜாதி ஒழிப்பு மாநாட்டை ஒசூரில் நடத்தியுள்ளார். இதன் மூலம் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதி கொடுமைகளைத் தடுக்கவும், அதனை ஒழிக்கவும் தமிழகத்தில் காவல்துறையினர் தனி உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும் என்றார்.
திருச்சியில் ஒத்தி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாநாடு ஜன.23-இல் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாநில, தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
மாநாட்டில் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, திமுக ஆட்சியின் போது அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கியவர் திமுக முன்னாள் தலைவரான மு.கருணாநிதி. ஆட்சிக்கு வந்தவுடன் இதனை நீண்ட நெடிய பார்வை கொண்டு அமைத்தார். இதன் மூலம் அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வழிவகை செய்யப்பட்டது என்றார்.
கூட்டத்தில் திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்ஏ, வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ முருகன், ஒசூர் நகரச் செயலாளர் எஸ்.ஏ.சத்யா, தளி முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், ஒசூர் முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








