சூளகிரி அருகே வயல்வெளிகளில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த மோட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஸ் (45). இவர் ஒசூர் அருகே உள்ள ஆழியாளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போடூர்பள்ளம் வனப் பகுதியிலிருந்து வெளியேறி சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த ஒற்றை யானை மாதேஸின் தோட்டத்துக்குள் புகுந்தது.
அப்போது, குடிசையிலிருந்து வெளியே வந்த மாதேஸை துரத்திச் சென்று தாக்கியது. இதில் நிகழ்விடத்திலே மாதேஸ் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற அவரது உறவினர்கள் மாதேஸ் சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பாமல், தங்களுக்கு வன விலங்குகள் தாக்குதலிலிருந்து நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும், இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கர், ஒசூர் வனச்சரகர் சீதாராமன், சூளகிரி தனி வட்டாட்சியர் ரெஜினா, சூளகிரி காவல் நிலைய ஆய்வாளர் முருகன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே 4 யானைகள் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி, புன்னாகரம் பகுதியில் சுற்றித் திரிவதால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வனப் பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.4 லட்சம் நிதியுதவி
யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கிருஷ்ணகிரி சூளகிரி வட்டம், ஆழியாளம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் மாதேஸ். இவர் ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராதவிதமாக காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைஅறிந்து வேதனை அடைந்தேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாதேஸ் குடும்பத்துக்கு வனத் துறை மூலம் ரூ. 4 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






