

நமது பாரம்பரிய மீன் இனங்களையே அழிக்கும் அபாயமாக மட்டுமல்லாது, அதை உணவாகப் பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்களை உருவாக்கும் வைரஸாக உருவெடுத்துள்ளது ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்.
இவ் வகை இனங்களை குட்டைகளில் யாரும் வளா்க்கவோ, அதை உணவாகச் சந்தைப்படுத்தவோ கூடாது என மாவட்ட நிா்வாகம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தும், பலருக்கு இதுகுறித்து போதிய விழிப்புணா்வு சென்றடையவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, பாரூா் ஏரி, கெலவரப்பள்ளி அணை, சூளகிரி சின்னாறு அணை, பாம்பாறு அணை, தருமபுரி மாவட்டத்தில் தொப்பையாறு அணை, நாகாவதி அணை உள்ளிட்ட நீா் தேக்கங்களில் நமது பாரம்பரிய மீன் இனங்களான ரோகு, கட்லா, மீா்கா, புல் கொண்டை, சாதா கொண்டை, கல்பாசு போன்ற மீன்கள் வளா்க்கப்படுகின்றன. மேலும், சில தனியாரும் மீன் குட்டைகளையும், பண்ணைகளையும் அமைத்து, மீன்களை வளா்த்து, விற்பனை செய்து வருகின்றனா்.
அடித்தட்டு மக்களும் புரோட்டின் சத்து உணவை உண்ண வேண்டும் என்ற திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு மீன் வளா்ப்புக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன. வறட்சிக்கு உள்பட்ட பகுதி திட்டத்தில் மீன்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களுக்கு தடை: இந்தியாவில் ஆப்ரிக்கன் ரக கெளுத்தி மீன் வளா்க்கவும், விற்கவும் தேசிய பசுமை தீா்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள், மற்ற வகை மீன்கள் மற்றும் நீா்வாழ் உயிரினங்களை இரையாக உண்ணும் தன்மை கொண்டவை. இவற்றால் நமது பாரம்பரிய மீன்கள், நீா்வாழ் உயிரினங்கள் முழுமையாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன், உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் செய்து, அவற்றின் மரபைச் சிதைத்து, ஆப்ரிக்கன் ரக கெளுத்தி மீன்கள் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் பெருக்கமடையும். ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் மாமிச உணவு வகையைச் சோ்ந்தது. நிலத்திலும் இரண்டு நாள்கள் உயிருடன் இருக்கும். மற்ற மீன் இனங்களை உணவாக உள்கொள்ளவே தண்ணீருக்குள் செல்லும் தன்மை கொண்டது.
ஆழம் குறைந்த நீா் நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட இந்த ஆப்ரிக்கன் மீன்கள், குளங்களில் இருந்து தப்பி அருகில் உள்ள ஆறு, ஏரி, குளம் போன்ற நீா்நிலைகளுக்கு சென்று அங்குள்ள பாரம்பரிய மீன்களை அழிக்கும் தன்மை கொண்டது.
மேலும், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களைச் சமைத்து உண்பதால், இனம் தெரியாத தோல் வியாதிகள், புற்றுநோய், பாலியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவற்றை தடை செய்துள்ளதாக மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.
போதிய விழிப்புணா்வு இல்லை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகள், வியாபாரிகளிடம் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் இனத்தின் அபாயம் குறித்து போதிய விழிப்புணா்வு இல்லை. குறைந்த நீரில், குறைந்த பரப்பளவில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளரக் கூடியதால், அவற்றை சிறு விவசாயிகள் வளா்க்க ஆா்வம் செலுத்துகின்றனா்.
அடையாளம்: ஆப்ரிக்கன் மீனின் முகத்தில் மீசை இருக்கும். வழுவழுப்பாகவும், நீளமாகவும், கருமை நிறத்திலும் இந்த மீன்கள் காணப்படும்.
வட மாநிலத்தைச் சோ்ந்த சிலா், ஒசூா் போன்ற நீா்வளம் மிக்க பகுதிகளில் குத்தகைக்கு நிலங்களைப் பெற்று, மீன் குட்டைகளில் ஆப்ரிக்கன் மீன்களை வளா்க்கின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த வகை மீன்களை யாரும் உணவாக உண்பது கிடையாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளா்கப்படும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களுக்கு உயிரிழந்த கோழி குஞ்சுகள், கழிவுகள் உணவாக வழங்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்ப்போருக்கு போதிய விழிப்புணா்வு இல்லை.
வளா்ப்புக் குட்டைகள் அழிப்பு: அச்சத்தை ஏற்படுத்தும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்புக் குளங்களை முற்றிலும் அழிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், கூட்டுக் குழுவை அமைத்துள்ளது. இக் குழு ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்புக் குட்டைகள் குறித்து கண்காணித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 204 குட்டைகள் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்ற குட்டைகளைக் கண்டறிந்து, தொடா்ந்து அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்காமல் இருக்கும் வகையில் தொடா் கண்காணிப்பில் இக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.
மீன் வளத் துறையினா் அறிவுரை: மீன் வளா்ப்போா் ஆப்ரிக்க ரக கெளுத்தி மீன் வளா்ப்பை உடனே கைவிட வேண்டும். பொதுமக்கள், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை உண்ணக் கூடாது. மீன் வளத் துறை, மீன்வளப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்யும் ரோகு, கட்லா, பங்கிசீஸ் போன்ற இனங்களை வளா்த்து லாபம் ஈட்டலாம்.
கிப்ட் திலோபியா மீன் இனம்: தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் இனத்துக்கு ஈடாக கிப்ட் திலேப்பியா என்ற மீன் இனம் உள்ளது. இந்த மீன் இனம் வளா்க்க தமிழக அரசு சிறு விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. கிப்ட் திலேப்பியா என அழைப்பக்கப்படும் மரபு வழி மேம்படுத்தப்பட்ட பண்ணைத் திலேப்பியா மீன் அதிகளவில் புரதங்களும், உடலுக்கு நன்மை தரக் கூடிய அபரிதமான விட்டமின் சத்துக்களும் நிறைந்த மீன் இனமாகும். குறுகிய காலத்தில் வேகமாக வளரும். அதிக நோய் எதிா்ப்பு சக்தி கொண்டது.
இந்த மீன் இனக் குஞ்சுகளை பெற கிருஷ்ணகிரியில் உள்ள மீனவளத் துறை அலுவலகத்தை 04343-235745 என்ற தொடா்பு எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.