தமிழ்நாட்டில் வளரும் மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம். தொழில் துறையில் விரைந்து வளர்ந்து வரும் மாவட்டமாகத் திகழ்கிறது. இத்தகைய வளம் கொண்ட கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2011-ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூர், தளி என 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, தளி ஆகிய தொகுதிகளில் திமுகவும், ஊத்தங்கரை (தனி), பர்கூர், ஒசூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. ஒசூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்த பா.பாலகிருஷ்ணா ரெட்டி, பதவி இழந்ததை அடுத்து, தற்போது அத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்காளர் விவரம்
ஜனவரி 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 2,25,148 வாக்காளர்களும், பர்கூர் தொகுதியில் 2,34,572 வாக்காளர்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் 2,51,821 வாக்காளர்களும், வேப்பனஅள்ளியில் 2,36,415 வாக்காளர்களும், ஒசூரில் 3,22,919 வாக்காளர்களும், தளி தொகுதியில் 2,39,210 வாக்காளர்கள் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 7,65,026 ஆண் வாக்காளர்கள், 7,44,835 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 15,10, 08 வாக்காளர்கள் உள்ளனர்.
வெற்றி வரலாறு
இதுவரை வெற்றி பெற்றவர்களின் விவரம்-1951, 1957- ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் சி.ஆர்.நரசிம்மன்(காங்கிரஸ்), 1962-ஆம் ஆண்டு தேர்தலில் க.ராசாராம் (திமுக), 1967-ஆம் ஆண்டு தேர்தலில் கமலநாதன் (திமுக), 1971-ஆம் ஆண்டு தேர்தலில் தீர்த்தகிரி கவுண்டர் (காங்கிரஸ்), இதே ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் சி.சுப்பிரமணியம் (காங்கிரஸ்), 1977-ம் ஆண்டு தேர்தலில் பி.வி.பெரியசாமி (அதிமுக), 1980, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்), 1991-ஆம் ஆண்டு தேர்தலில் கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்), 1996-ஆம் ஆண்டு தேர்தலில் சி.நரசிம்மன்(தமாகா), 1998-ஆம் ஆண்டு தேர்தலில் கே.பி.முனுசாமி (அதிமுக), 1999-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிச் செல்வன்(திமுக), 2004, 2009 ஆகிய தேர்தல்களில் இ.ஜி.சுகவனம்(திமுக), 2014-ஆம் ஆண்டு தேர்தலில் கே.அசோக்குமார் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதுவரை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் உள்பட தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியானது 8 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1998-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திராவிடக் கட்சிகளான அதிமுகவும், திமுகாவும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் 1998-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி அதிமுக சார்பிலும், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.செல்லகுமாரும் போட்டியிடுகின்றனர். அமமுக சார்பில் கணேசகுமாரும் போட்டியிடுகிறார்.
வாக்காளர்களின் வாழ்வாதாரம்
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி. இந்தத் தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, இந்தி என பல்வேறு மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். கிரானைட் மெருகூட்டும் தொழில், தோட்டக் கலை பயிரான மா, ரோஜா, கொய் மலர் சாகுபடி, காய்கறிகள், ராகி சாகுபடி செய்வது இங்கு முக்கிய தொழிலாக உள்ளது. ஒசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் மற்றும் சிறு தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையே இந்தப் பகுதி மக்களின் வேலைவாய்ப்பு மையமாக விளங்குகிறது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் வன்னியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அடுத்தபடியாக வெள்ளாளக் கவுண்டர்களும், ஆதி திராவிடர்களும் உள்ளனர். இதேபோல், ஒக்கலிக்க கவுடா, ரெட்டி, தெலுங்கு செட்டியார், நாயுடு, சிறுபான்மையினத்தவர்களான இஸ்ஸாமியர்கள், கிருஸ்துவர்கள் என பரவலாக தொகுதி முழுவதும் வசிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), பர்கூர், தளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாகும். ஒசூர் தொகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதியானது ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில எல்லையில் அமைந்திருந்தாலும், பிற்பட்ட தொகுதியாகவே உள்ளது.
தொழிற்சாலை மிகுந்த பகுதியாக ஒசூர் இருந்தாலும், பொதுவாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலைதேடி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு செல்லுகின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தின் போது துண்டிக்கப்பட்ட ரயில் போக்குவரத்தானது மீண்டும் தொடங்க வேண்டும் இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை முதல் ஒசூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாக இருக்கும். ஆனால், இதுவரையில் இந்த வாக்குறுதியானது எவராலும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், விவசாயப் பொருள்கள், காய்கறிகள், மலர்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
அதிமுக - காங்கிரஸ் போட்டி
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுகவைச் சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், கடந்த 1998-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி மீண்டும் போட்டியிடுகிறார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர். தொகுதி முழுவதும் அனைவரிடமும் நன்கு அறிமுகமானவர்.
கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தமாக, தேமுதிக போன்ற கட்சிகள் இவருக்கு கூடுதல் பலம்.
இவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அ.செல்லகுமார் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாராகவும் உள்ளார். 1991-ஆம் ஆண்டு சென்னை, அண்ணா நகர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளின் ஆதவும், கிருஸ்துவர்கள், இஸ்ஸாமியர்களின் ஆதரவும் இவருக்கு கூடுதல் பலம்.
இதேபோல், அமமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த கணேசகுமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலைக் காட்டிலும் 1,57,512 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த புதிய, இளம் வாக்காளர்களே கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரை தீர்மானிப்பவராக இருப்பர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மும்முனை போட்டியாக இருந்தாலும், இழந்த தொகுதியை மீட்பதில் காங்கிரஸ் கட்சியும், தொடர்ந்து வெற்றியை தக்க வைப்பதில் அதிமுகவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.