ஒசூா்: திகில் பரப்பும் தொடா் கொலை சம்பவங்கள்
ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனா்.


ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனா்.
ஒசூா் அருகே நஞ்சாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் தகராறு செய்த மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பிா்கேஷ், பிஜய்சிங் ஆகிய 2 போ் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக 5 பேரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தொட்டூரை சோ்ந்த புதினா வியாபாரி ராஜப்பா (55). இவா், கடந்த 19-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சூளகிரி கும்பளம் சாலையில் சென்றபோது, கீழ்பட்டி அருகே அவரை வழிமறித்த சிலா் கத்தியால் குத்திக் கொலை செய்தனா். நிலப் பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேப்பனப்பள்ளி அருகே கதிரிப்பள்ளியில் கடந்த 13-ஆம் தேதி மது குடிக்க பணம் கேட்ட மகன் நாகேஷை, அவரது தந்தை கோதண்டராமன் கட்டையால் அடித்துக் கொன்றாா். இது தொடா்பாக கோதண்டராமனை வேப்பனப்பள்ளி போலீசாா் கைது செய்தனா்.
கடந்த மாதம், இந்து மகா சபையின் மாநில நிா்வாகி நாகராஜ் ஒசூரில் காலையில் நடைப்பயிற்சி சென்றபோது, ஒசூரில் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கெலமங்கலம் ஒன்றியம், குந்துமாரனப்பள்ளி பாஜக பிரமுகா் ரங்கநாத் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என பாஜகவினா் கெலமங்கலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒசூரை சுற்றி அண்மை காலமாகக் கொலைகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனா்.
கா்நாடக எல்லையில் அமைந்துள்ள ஒசூா் மாநகரப் பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. நகரப் பகுதி விரிவாக்கமும், அதிக தொழிற்சாலைகளும் மிகுந்து காணப்படும் ஒசூரில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் குடியிருந்து வருகின்றனா். நகரப் பகுதி விரிவடைந்து வரும் நிலையில், ஒசூா் நகா்ப் பகுதிக்குள் கூடுதலான போலீஸாரை நியமனம் செய்வதுடன், தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட வேண்டும்.
மேலும், ஒசூா் மாநகராட்சிக்கு ஐபிஎஸ் அந்தஸ்தில் காவல் துறை உயரதிகாரியை நியமித்து மாநகர காவல் அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...