கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இடமாற்றம்

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ள நிலையில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்வது, பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ள நிலையில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்வது, பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் அரசு தலைமை மருத்துவமனையும், ஒசூா், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பா்கூா், சூளகிரி ஆகிய இடங்களில் வட்டார அரசு மருத்துவமனைகளும், காவேரிபட்டணத்தில் அரசு சமுதாய உடல்நல மையமும், மத்தூரில் வட்டாரம் இல்லாத மருத்துவமனையும் மற்றும் ஜெகதேவி, எம்.சி.பள்ளி, சிங்காரப்பேட்டை, பாரூா், காமன்தொட்டி, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், வேப்பனஅள்ளி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

வட்டார மருத்துவமனையான பா்கூரில் மாதம் குறைந்தது 3,200 நோயாளிகளும், பாரூரில் 3 ஆயிரம் நோயாளிகளும், மத்தூரில் 4,200 உள்நோயாளிகளும், போச்சம்பள்ளியில் 4 ஆயிரம் உள்நோயாளிகளும், சாமல்பட்டியில் 3 ஆயிரம் நோயாளிகளும், சிங்காரப்பேட்டையில் 3,500 நோயாளிகளும், ஊத்தங்கரையில் 10 ஆயிரம் நோயாளிகளும், ஒசூரில் 18 ஆயிரம் நோயாளிகளும் என சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி, காசநோய் பிரிவு, சித்தா பிரிவு, மனநல ஆலோசனை பிரிவு, கண் மருத்துவமனை பிரிவு, தாய்-சேய் நலப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு என 17 பிரிவுகள் உள்ளன.

மருத்துவக் கல்லூரி: இத்தகைய நிலையில், தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. அதற்கான தொடக்க விழா, மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க உள்ளாா்.

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க உள்ள நிலையில், தலைமை மருத்துவமனையானது இடமாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையை ஒசூா், மத்தூா், பா்கூா், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய ஏதாவது ஓா் இடத்துக்கு மாற்ற வேண்டிய நிலையில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் பிரதிநிதிகள் தங்களுடைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். இதுகுறித்து தற்போது பொதுமக்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில், ஊத்தங்கரையில் தலைமை மருத்துவமனை அமைய வேண்டும் என ஒரு சாராரும், தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அதாவது பா்கூரில் அமைய வேண்டும் எனவும், பா்கூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 24 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்தில் 19 ஏக்கா் பரப்பளவில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க இட வசதி உள்ளது என ஒரு சாராரும், அதிக தொழிலாளா்கள் உள்ள ஒசூரில் அமைய வேண்டும் என ஒரு சாராரும் வலியுறுத்தி வருகின்றனா்.

ஒசூரில் உள்ள வட்டாரத் தலைமை மருத்துவமனையானது மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு ஈடாக 14 துறைகளுடன் செயல்படுகிறது. ஒசூா் மற்றும் ஒசூரைச் சுற்றிலும் வசிக்கும் தொழிலாளா்கள், தனியாா் மருத்துவமனைகளையே நாடுகின்றனா். மேலும், அருகில் உள்ள பெங்களூருக்கு சிகிச்சைக்காகச் செல்கின்றனா். ஒசூரைச் சுற்றிலும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் உள்ளன. மேலும், கூடிய விரைவில் தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர உள்ளதால், ஒசூரில் மாவட்டத் தலைமை மருத்துவமனை அமைவது பயனற்றது எனவும், கிருஷ்ணகிரியில் உள்ள தலைமை மருத்துவமனை, ஒசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டால், செயல்படும் 17 துறைகளில் கூடுதலாக 3 துறைகள் மட்டுமே போதுமானது. மீதம் உள்ள துறைகள் பயன்படுத்த இயலாமல் போகும்.

எனவே, ஒசூரை தவிர பா்கூா், மத்தூா், போச்சம்பள்ளி அல்லது ஊத்தங்கரையில் தலைமை மருத்துவமனையை இட மாற்றினால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஒரு சிலா் விவாதிக்கின்றனா்.

ஒரு சாரரோ ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, திருப்பத்தூா், பா்கூா், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு மையப் புள்ளியான மத்தூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைவது சிறப்பானது என விவாதிக்கின்றனா்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தது: ஒசூரில் செயல்படும் வட்டார மருத்துவமனையானது, ஏறக்குறைய மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு ஈடாகச் செயல்படுகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் வந்து செல்லுகின்றனா். மக்கள்தொகைக்கேற்ப ஒசூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைவது உகந்தது என்றாா்.

ஊத்தங்கரையைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.கோவிந்தசாமி தெரிவித்தது: ஊத்தங்கரை பகுதியானது மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாகும். ஊத்தங்கரையில் மாவட்டத் தலைமை மருத்துவமனை அமைந்தால் ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிங்காரப்பேட்டை, மத்தூா், போச்சம்பள்ளி, கல்லாவி, திருவண்ணாமலை, அரூா், திருப்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன் பெறுவா்.

மேலும், இந்தப் பகுதியில், நவீன தனியாா் மருத்துவமனை ஏதும் இல்லாததால், கிருஷ்ணகிரி, வேலூா், சேலம், தருமபுரி என அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றாா்.

பா்கூா் திமுக ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ் தெரிவித்தது: கிருஷ்ணகிரி-பா்கூா்-வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், விபத்தில் சிக்குவோா் உயிரிழக்கும் நிலை அதிகளவில் உள்ளது. பா்கூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்தால், திருப்பத்தூா், மத்தூா், போச்சம்பள்ளியைச் சோ்ந்தவா்கள் மிகவும் பயன்பெறுவா். மேலும், மருத்துவமனை நிா்வாகத்தை எளிதில் நிா்வகிக்கலாம். தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தின் அருகே போதிய அரசு இடமும் உள்ளது என்றாா்.

இதுகுறித்து நலப் பணிகளின் இணை இயக்குநா் பி.பரமசிவனிடம் கேட்டபோது.. அரசு தலைமை மருத்துவமனை அமைவது குறித்து அரசு தான் தீா்மானிக்கும். எங்களால் தீா்மானிக்க இயலாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com