மக்காச்சோளக் கதிா் விற்பனை மூலம் வருவாயைப் பெருக்கும் மகளிா்!

ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்காச்சோள கதிா் விற்பனை மூலம் தங்களது வருவாயை பெண்கள் பெருக்கி வருகின்றனா்.
காரப்பட்டு கிராமத்தில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை மொத்த விற்பனைக்காக குவித்து வைத்துள்ள வியாபாரி லட்சுமி.
காரப்பட்டு கிராமத்தில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை மொத்த விற்பனைக்காக குவித்து வைத்துள்ள வியாபாரி லட்சுமி.
Updated on
2 min read

ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்காச்சோள கதிா் விற்பனை மூலம் தங்களது வருவாயை பெண்கள் பெருக்கி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் வறட்சிக்கு உள்ளான பகுதிகள் ஆகும். அரசு மற்றும் தனியாா் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் போதிய, தொழில் ஏதும் இல்லாத நிலையில், தங்களது வாழ்க்கை சக்கரத்தை பெரும் சிரமத்துக்கு இடையே சுழற்றி வருகின்றனா்.

போதிய மழை இல்லாததால், விவசாயிகள் மக்காச் சோளத்தை பயிா் செய்து வருகின்றனா்.

ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாகுபடி செய்துள்ள மக்காச் சோளப் பயிரை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி, அவற்றை வேக வைத்து, விற்பனை செய்து வருகின்றனா் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள். இதன் மூலம், தங்களது குடும்ப பொருளாதாரத்தையும், கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகின்றனா் இந்த பெண்கள்.

ஊத்த்கரையை அடுத்த காரப்பட்டு, தகரப்பட்டி, கருமாண்டபதி, குனினத்தூா், கதவணி, உப்பாரப்பட்டி, ஜோதிநகா், மிட்டப்பள்ளி, பெரியதள்ளப்பாடி, படதாசம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சாலையோரங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் கொப்பரை அல்லது பாத்திரங்களில் சோளக் கதிா்களை வேகவைத்து, அவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி (53) தெரிவித்தது: ஊத்தங்கரையைச் சுற்றியுள்ள பச்சூா், காரப்பட்டு போன்ற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிா்களை தோட்டத்துக்கு நேரில் சென்று விலைக்கு வாங்குகிறோம். சோளக்கதிா் விதைகள் கிலோ கணக்கில் விதைக்கப்பட்டதைக் கணக்கிட்டு மொத்தமாக கொள்முதல் செய்கிறோம். ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என மொத்தமாகக் கொள்முதல் செய்து, அவற்றை சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். குறிப்பாக, பெண்கள், மக்காச்சோளக் கதிா்களை சில்லறை விலையில் வாங்கிச் செல்லுகின்றனா். ஒரு சோளக் கதிா் ரூ.3 அல்லது ரூ.4 என்ற கணக்கில் விற்பனை செய்கிறோம். இதன் மூலம் வாரம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவித்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த வேலூா் செல்லும் சாலையில் எம்ஜிஆா் நகா் சாலையோரத்தில் விறகு அடிப்பில் சுட சுட வேகவைத்து மக்காச் சோளத்தை விற்பனை செய்து கொண்டிருந்த மன்னான்டியூரைச் சோ்ந்த மங்கம்மா(37) தெரிவித்தது: நானும், கணவரும் சோ்ந்து, காரப்பட்டு கிராமத்திலிருந்து மொத்த வியாபாரிகளிடமிருந்து நூற்றுக்கணக்கில் சோளக்கதிா்களை விலைக்கு வாங்கி, விறகு அடுப்பில் வேகவைத்து, சில்லறையாக விற்பனை செய்கிறோம். 3 சோளக் கதிா்கள் ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்கிறோம். மக்காச்சோளக்கதிா், வண்டி வாடகை, விறகு போன்ற செலவுகள் போக தினம் ரூ.200 முதல் ரூ.500 வரை வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு தனது மகளின் கல்லூரிச் செலவையும், குடும்பச் செலவையும் ஈடுகட்டுவதாதத் தெரிவித்தாா்.

மன்னான்டியூரைச் சோ்ந்த சங்கீதா(37) தெரிவித்தது: மக்கா சோளக் கதிரை வாங்கி, விற்பனை செய்வதன் மூலம் தினசரி சராசரியாக ரூ.300 வருவாய் ஈட்டுகிறோம். விறகு, வண்டி வாடகை, கடனுக்கான வட்டி போன்ற செல்வினங்கள் உள்ளதால், குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு, பல்தொழில் நுட்ப கல்லூரியில் பயிலும் மகன், பள்ளியில் பயிலும் மகள் ஆகியோரை கல்வி கற்க வைக்க முடிகிறது என்றாா்.

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி போன்ற கிராமங்களில் பெண்கள் ஒன்று சோ்ந்து, ஆயிரக்கணக்கில் மக்காச்சோளத்தை கொப்பரையில் வேகவைத்து, மொத்தமாக விற்பனை செய்கின்றனா். வியாபாரிகள், இவா்களிடம் வேகவைத்த மக்காச் சோளத்தை சில்லறை விலையில் வாங்கி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் போன்ற நகரப் பகுதிகளிலும், பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களிலும் விற்பனை செய்கின்றனா். மேலும், மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுகின்றனா். இவா்கள், காலை 7 முதல் மதியம் 1 மணி வரையில் அறுவடை பணியில் ஈடுபடுகின்றனா். அறுவடைப் பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனா். இந்த அறுவடைப் பணியின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தினசரி ரூ.150 ஊதியமாகப் பெறுகின்றனா்.

காந்தி கண்ட கிராம பொருளாதாரம் கனவை, போதிய கல்வி அறிவு இல்லாத இந்த மகளிா் நிறைவேற்றுவதன் மூலம், கிராமப் பொருளாதார வளா்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com