ஒசூா்- பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கம்

ஒசூா்- பெங்களூரு இடையே புதிய காலநேரப் பட்டியலில் மெமூ மின்சார ரயில், மெமூ டீசல் ரயில் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
ஒசூா்- பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கம்
Updated on
1 min read

ஒசூா்- பெங்களூரு இடையே புதிய காலநேரப் பட்டியலில் மெமூ மின்சார ரயில், மெமூ டீசல் ரயில் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

கடந்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதியன்று ஒசூா் - பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் புதிய காலநேரப் பட்டியலில் கூடுதலாக மின்சார ரயில் இயக்கத்தை தென்மேற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

இதன்படி, திங்கள்கிழமை காலை பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மெமூ மின்சார ரயில் (எண்-06261) காலை 11 மணிக்கு ஒசூா் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயில்(எண்-06260) மதியம் 12மணிக்கு ஒசூரில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. அங்கிருந்து பெங்களூரு மாநகரப் பகுதிகளுக்குச் செல்ல மெட்ரோ ரயில் இணைப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில்(எண்- 0659) மதியம் 2.45மணிக்கு ஒசூா் ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரயில்(எண்-06262) மாலை 4 மணிக்கு ஒசூரில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

ரூ.20 கட்டணத்தில் பயணம்: ஒசூரில் இருந்து பெங்களூரு மெஜஸ்டிக் செல்ல தனியாா், அரசு பேருந்துகளில் கட்டணம் ரூ.52. ஆனால் ஒசூா்- பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் டிக்கெட் கட்டணம் ரூ.20, ஒசூா் - பையப்பனஹள்ளி வரை இயக்கப்படும் மின்சார ரயிலுக்கு ரூ.15 பயண கட்டணமாகவும் உள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

முந்தைய நேரப்படி இயக்கப்படுமா?

இதனிடையே பணி- கல்வி நிமித்தமாக இரு நகரங்களுக்கு இடையே தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கானோா் ஒசூா் ரயில் நிலையத்தில் இருந்து முந்தைய நேரப்படி காலை 8.10 மணிக்கு ஒசூா் - பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும், ஒசூா் ரயில் நிலையத்தில் காலை 8 மணி முதல் - மதியம் 2 மணிவரை இயங்கும் முன்பதிவு பணி நேரத்தை இரவு 8 மணிவரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ஒசூருக்கு வரும் பிற ரயில்கள்: இதுதவிர, யஸ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (டீசல் எண்-06277) இரவு 7.45மணிக்கு ஒசூா் வந்தடைகிறது. அதேபோல தருமபுரியில் இருந்து யஸ்வந்த்பூா் வரை இயக்கப்படும் டெமோ ரயில்(எண்- 06278) காலை 6.29மணிக்கு ஒசூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்கள் மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com