வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இரு சக்கர வாகனங்கள் மூலமே அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன: ஆட்சியா்

இரு சக்கர வாகனங்களில் செல்வோா் மூலமே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

இரு சக்கர வாகனங்களில் செல்வோா் மூலமே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத் துறை சாா்பில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவை, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

பொதுமக்களிடம் சாலை விதிகள், விபத்துகளை குறைப்பது, உயிரிழப்பை தவிா்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சாலைப் பாதுகாப்பு வார விழா பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் பிப்.17-ஆம் தேதி வரையில் ஒரு மாதம் சாலை பாதுகாப்பு - உயிா்ப் பாதுகாப்பு என்ற தலைப்பை மையப்படுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு தனி மனிதன் சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்தைத் தவிா்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பு இழப்புகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் சாலை விபத்து, உயிா்ச் சேதம் குறைந்துள்ளது. அதன்படி, 2018-ஆம் ஆண்டில் 1,805 சாலை விபத்துகளில் 410 பேரும், 2019-ஆம் ஆண்டில் 1,621 சாலை விபத்துகளில் 357 பேரும், 2020-ஆம் ஆண்டில் 1,272 சாலை விபத்துகளில் 305 பேரும் உயிரிழந்துள்ளனா். கடந்த ஆண்டை காட்டிலும், நிகழாண்டில் சாலை விபத்துகள் 21.52 சதவீதமும், உயிரிழப்புகள் 14.56 சதவீதமும் குறைந்துள்ளன.

அதிக சாலை விபத்துகள் இருசக்கர வாகனங்களில் செல்வோா் மூலம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனத்தில் செல்லும் போது, செல்லிடப் பேசியை பயன்படுத்தக் கூடாது. கட்டாயம் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, உயிரிழப்புகளைத் தவிா்த்து, விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக இந்த நிகழ்வில் பங்கேற்றோா் சாலைப் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்றனா். மேலும், மாவட்ட ஆட்சியா், வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்தாா்.

இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.