திமுக அரசு அனைத்துத் துறையிலும் தோல்வி அடைந்துள்ளது: கேபி முனுசாமி

தமிழகத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் அதிமுக. துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கும் கேபி முனுசாமி.
நலத்திட்ட உதவிகளை வழங்கும் கேபி முனுசாமி.
Published on
Updated on
2 min read

தமிழகத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக அதிமுக. துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் அதிமுகவின் 51 வது தொடக்க விழாவையொட்டி கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அதிமுகவின் நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார் எம்எல்ஏ, தமிழ்ச்செல்வம் எம்எல்ஏ, காவேரிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கேபி முனுசாமி எம்எல்ஏ பேசியது: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திமுக,  சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை.  

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய்  தருவதாக அறிவித்தது. எரிவாயு உருளைக்கு ரூ 100 மானியம் வழங்குவதாகவும் அறிவித்தது. இதுபோன்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. சொத்துவரி,  மின்சார கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஜெயலலிதா அறிவித்த இருசக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் போன்ற அனைத்து திட்டங்களையும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. தற்போது, பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி உள்ளது.  மேலும், பால்  மதிப்புக்கூட்டு பொருட்களின் விலையை 18% உயர்த்தி உள்ளது.  

இப்படி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, எல்லா நிலைகளிலும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வாரி வாரி வழங்கினார். ஆனால் திமுக, வெல்லம் போன்ற பொங்கப் பொருட்களை தரமற்று வழங்கியது.  அதில் ரூ.240 கோடி சம்பாதித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் குண்டு வெடித்து இருந்தால் 400,  500 பேர் உயிரிழந்திருப்பார்கள். காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. காவல்துறையில் ஏதாவது புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சந்து கடைகளில் மதுபானங்கள் அதிக அளவில்  விற்கப்படுகின்றன. 

திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏக்களின் ஏவல் துறையாக காவல்துறை மாறிவிட்டது. திமுகவின் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாதவர்களாக உள்ளனர். இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. இத்தகைய கூட்டணிக் கட்சியினரை தமிழக அரசு எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். எனவே,  தமிழகம் எல்லாத் துறையிலும் தோல்வி அடைந்துள்ளது இந்த சூழ்நிலையில் அதிமுகவினர் தங்களது பணியை துரிதப்படுத்துங்கள். அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையானதை அறிந்து உதவுங்கள். வாக்காளர்கள் நம் மீது அன்புடன் தான் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் அவர்கள் மாற்றி வாக்களித்ததை தவறு என உணர்கிறார்கள்.  

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளும் வெற்றி பெறும். எனவே இந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்வை அதிமுக வட்டச் செயலாளர் ஹரி ஒருங்கிணைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com