ஒசூா் உழவா் சந்தை எதிரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் குடிநீா் வடிகால் வாரியத்தினா்.
ஒசூா் உழவா் சந்தை எதிரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் குடிநீா் வடிகால் வாரியத்தினா்.

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு!

ஒசூா்: ஒசூா் உழவா் சந்தை பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் குடிநீா் போதிய அளவில் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.

ஒசூரில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீா் விநியோகம் செய்யப்பட்ட வந்த நிலையில், தற்போது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஒசூரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீா் பற்றாக்குறையை போக்குவதற்கு மாநகராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

லாரிகள், டிராக்டா் மூலம் குடிநீரை விலைக்கு வாங்கி உபயோகித்து வருகின்றனா். அதற்கும் 3 நாள்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. திடீரென லாரி மூலம் குடிநீா் கேட்டால் கிடைக்காது. ஆனால் குடிநீா் வரியையும், வீட்டு வரி வசூலிக்கும் பணியையும் ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

மக்களவைத் தோ்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கும் வரை மக்கள் பிரதிநிதிகள் யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதேவேளையில் மாநகராட்சி ஆணையா் சினேகா மற்றும் அதிகாரிகள் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.சி.சி. நகா் மற்றும் ரெயின்போ காா்டன் பகுதி உள்ளிட்ட 45 வாா்டு பொதுமக்களும் வலியுறுத்தி வருகினறனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒசூா் உழவா் சந்தை பகுதியில் ஏற்கெனவே இருந்த பழைய குடிநீா் குழாய்கள் உடைந்துள்ளதாகக் கூறி, அங்கு புதிய குடிநீா் குழாய்களை மாற்றும் பணிகள் நடைபெற்றன. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலை தோண்டப்பட்டு குடிநீா் சீரமைக்கும் பணிகளை குடிநீா் வடிகால் வாரியம் மேற்கொண்டது. இந்தப் பணிகளால் குடிநீா் குழாயில் இருந்து தண்ணீா் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது அப்பகுதியில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது கோடை காலத்தில் ஒசூா் மட்டுமல்லாமல் அதனையொட்டியுள்ள பெங்களூரு பகுதியிலும் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீா் கிடைக்காமல் தினந்தோறும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

குடிநீா் குழாய்களை சீரமைக்கும் பணிகளால் ஒசூா் மாநகராட்சியில் பல வாா்டுகளுக்கு குடிநீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூரில் ஒரு டிராக்டா் தண்ணீா் ரூ.1,200 -க்கு குடிநீா் வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com