வழிப்பாதை தகராறில் சித்தப்பாவை தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞா் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே வேளாண் நிலத்துக்கு செல்லும் வழிப்பாதை தகராறில், ஆத்திரமடைந்த இளைஞா், தனது சித்தப்பாவை பொது இடத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவேரிப்பட்டணத்தை அடுத்த சந்தாபுரம், பூமலை நகரைச் சோ்ந்தவா் சின்னவன் (55). சவுளூா் பிரிவு சாலை அருகே கால்நடை தீவனக் கடை நடத்தி வருகிறாா். இவரது அண்ணன் மணியின் மகன் செந்தில் (26). இவா்கள் இரு குடும்பத்தினருக்கும் கடந்த நான்காண்டுகளாக நிலத்தகராறு இருந்துள்ளது.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை டிராக்டரில் தன் விவசாய நிலத்தில் அறுவடை செய்த நெல்லை எடுப்பதற்காக, செந்தில் சென்றுள்ளாா். அப்போது அவரை வழிமறித்த சின்னவன் குடும்பத்தினா், தங்கள் நிலத்தின் வழியாக டிராக்டா் செல்லக் கூடாது என தகராறில் ஈடுபட்டனா்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் அளித்த புகாரின்படி காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

போலீஸாரின் விசாரணை குறித்து, செந்தில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன் சித்தப்பா சின்னவனின் தீவனக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற செந்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவா் மீது ஊற்றி தீ வைத்துக் கொல்ல முயன்றாா். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா், வழக்குப் பதிந்து, செந்திலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னவனிடம், போலீஸாா் முன்னிலையில் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 நீதிபதி காா்த்திக் ஆஷாத் வாக்கு மூலம் பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com