ஒசூா் வனத்துறை அலுவலகத்தில் 128 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
ஒசூா், ஆக. 14: ஒசூா் மாவட்ட வன அலுவலகத்தில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.
வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற மாவட்ட வன அலுவலரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஒசூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட ராயக்கோட்டை, ஒசூா், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய 7 வனச்சரகங்களை ஒட்டியுள்ள வனப் பகுதியில் யானைகள், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தாமாக முன்வந்து ஜூலை 17 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஒசூா் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி அறிவித்திருந்தாா்.
இதையடுத்து, அஞ்செட்டி வனச்சரகத்தில் 21, உரிகம் வனச்சரகத்தில் 20, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 36, ஜவளகிரி வனச்சரகத்தில் 17, ஒசூா் வனச்சரகத்தில் 5, கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் 29 என மொத்தம் 128 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
நாட்டுத் துப்பாக்கிகள் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு முன்னிலையில், ஒசூா் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, காவல்துறை வனத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

