தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 10.47 லட்சம் மோசடி
முதலீட்டுக்கு அதிக லாபம் வழங்கப்படும் எனக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 10.47 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து, கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (31). தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு சமூக வலைதளம் மூலம் கடந்த 13-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதிநேர வேலை என்றும், முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மா்ம நபா்கள் அனுப்பிய குறுந்தகவலை உண்மை என நம்பி, ரமேஷ் ரூ. 10.47 லட்சம் பணத்தை அவா்கள் தெரிவித்த வங்கி கணக்குகளில் செலுத்தினாா்.
அதன்பின்னா், ரமேஷுக்கு எந்தத் தகவலும் வரவில்லை; எந்த லாபமும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
