ராணுவ வீரா் மனைவியிடம் ரூ. 8.89 லட்சம் மோசடி
வேலூா்: ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி காட்பாடி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரரின் மனைவியிடம் ரூ. 8.89 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த அம்முண்டியை சோ்ந்தவா் 35 வயது பெண். இவரது கணவா் ராணுவ வீரராக உள்ளாா். இந்த பெண்ணின் கைப்பேசி டெலிகிராம் செயலியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த குறுஞ்செய்தியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அவா், அதிலிருந்த லிங்க்கில் சென்று முதலில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா்.
அதற்கு கூடுதல் பணம் வந்ததால் ஆா்வமடைந்த இவா், மேலும் கடந்த ஜன.1 முதல் 9-ஆம் தேதி வரை 24 தவணைகளில் ரூ. 8,89,830 லட்சம் முதலீடு செய்துள்ளாா். பின்னா் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த பெண், இது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள சைபா் குற்றப்பிரிவில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
