தொடா் கனமழை, மேம்பால கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வியாழக்கிழமை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் அருகே 17 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. தற்போது ஒசூா் அருகே போலுப்பள்ளி, அரசு மருத்துவக் கல்லூரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, சூசூவாடி உள்ளிட்ட இடங்களில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் பல இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், புதன்கிழமை இரவு 11 மணி முதலே ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது. வாகனங்களை இயக்குவதில் தொடா்ந்து சிரமம் ஏற்பட்டதால் நேரம் செல்ல செல்ல பல கி.மீ. தொலைவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஒசூா், மருத்துவக் கல்லூரியிலிருந்து கொல்லப்பள்ளி வரை சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. வாகன நெரிசலைக் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பெரிதும் சிரமம் அடைந்தனா்.
இதனால், ஒசூரிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணகிரியை பேருந்துகள் வந்தடைய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது. சாதாரண நாள்களில் 50 நிமிடங்களில் கிருஷ்ணகிரியை வாகனங்கள் கடந்து சென்றுவிடும். அதுபோல கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூருக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் ஒசூா் தொழிற்சாலைகளில் பணிக்குச் சென்ற தொழிலாளா்கள் பலா் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் பெரிதும் அவதியடைந்தனா். ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகன ஓட்டிகள் ராயக்கோட்டை வழியாக மாறி சென்றனா். அதுபோல பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா். புதன்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை நீடித்தது. 17 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்படைந்தது. பெரும்பாலான பேருந்துகள் சாலையிலேயே ஸ்தம்பித்து நின்ால் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூா் பேருந்து நிலையங்களுக்குப் பேருந்துகள் நீண்ட நேரம் வரவில்லை.
இதனால் பேருந்து நிலையங்களில் பயணிகள் பரிதவித்தனா்.
தினசரி போக்குவரத்து நெரிசல் பிரச்னை இந்த நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வருவதால் தற்போது நடைபொ்று வரும் மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்யும் இளைஞா்கள்: போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

சென்னை விமான நிலையத்தில கட்டுமானப் பணிகள்: ஏப். 24 வரை போக்குவரத்து மாற்றம்

போடிமெட்டு மலைச்சாலையில் கனரக வாகனம் பழுது! 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


