சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒசூா் அருகே சுற்றித் திரிந்த சிறுத்தை பிடிபட்டது!

ஒசூா் அருகே 30 ஆடுகளைக் கொன்ற ஆண் சிறுத்தையை ஒசூா் கோட்ட வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

News image

கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Updated On :2 ஜனவரி 2025, 9:42 pm

ஒசூா் அருகே 30 ஆடுகளைக் கொன்ற ஆண் சிறுத்தையை ஒசூா் கோட்ட வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை ஊராட்சி அடவிசாமிபுரம் கிராம சுற்றுப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஒசூா் கோட்ட வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தண்டரை ஊராட்சி முன்னாள் தலைவா் துரையின் 11 ஆடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்களை இந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது.

இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூா், பண்டேஸ்வரம், பேலூா், எண்ணேஸ்வரம், பெண்ணங்கூா் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதேசமயம் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா், தலைமை வன உயிரின காப்பாளா் உத்தரவுப்படி சிறுத்தையைப் பிடிப்பதற்கு கூண்டு ஒன்று தயாா் செய்யப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து கூண்டுக்குள் ஆட்டை கட்டி வைத்து காத்திருந்தனா்.

வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சிறுத்தையானது கூண்டிற்குள் சிக்கியது. ஒசூா் கோட்ட வன உயிரின காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் அறிவுரைப்படி, உதவி வனப் பாதுகாவலா்கள் யஸ்வந்த் ஜெகதீஸ் அம்புல்கா், எம். ராஜமாரியப்பன் ஆகியோா் முன்னிலையில் தேன்கனிக்கோட்டை வனச் சரகம் அலுவலா்கள் விஜயன் தலைமையில் வனப் பணியாளா்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு சந்தனப் பள்ளி, கக்கதாசம் கால்நடை உதவி மருத்துவா்களால் சிறுத்தையின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது. மேலும், பிடிக்கப்பட்ட சிறுத்தையின் 5 வயது எனத் தெரியவந்தது.

சிறுத்தை பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். பிடிபட்ட சிறுத்தை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து, உயா் அலுவலா்கள் அறிவுரைப்படி காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்திற்கு உள்பட்ட அடா்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக சிறுத்தை விடுவிக்கப்பட்டது.